தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக நியமிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. 


கடந்த 2011-2016 அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் அப்போது திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி 3 ஆயிரம் பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அவர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தை நாடினார். ஆனால் இரண்டு இடங்களிலும் செந்தில் பாலாஜி கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. 


இதற்கிடையில் செந்தில் பாலாஜியின் அமைச்சரவை இலாகாக்கள் சக அமைச்சர்களான தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் இலாகா இல்லாத அமைச்சராக செயல்படுவார் என தமிழ்நாடு அரசு தெரிவித்தது. நீதிமன்ற காவல் காரணமாக புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி 2 முறை ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். ஆனால் இதுவரை அவருக்கு பிணை கிடைக்கவில்லை. அதேசமயம் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் அங்கும் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. 


இதனிடையே செந்தில் பாலாஜியின்  நீதிமன்ற காவலை 14வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


நேற்று காணொலி காட்சி வாயிலாக அவர் நீதிபதி எஸ். அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் ஜனவரி 11 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி 3வது முறையாக தாக்கல் செய்த ஜாமீன் மனு ஜனவரி 8 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 


இந்நிலையில் இலாகா இல்லாத அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி எந்த அடிப்படையில் அந்த பதவியில் நீட்டிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக்கோரி அதிமுக முன்னாள் எம்.பி., ஜெயவர்தன், வழக்கறிஞர் எஸ்.ராமசந்திரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதேபோல் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவரும் இலாகா இல்லாத அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்த ஆளுநர் உத்தரவை நிறுத்தி வைத்ததை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், ‘இந்த வழக்குகளில் தங்களால் உத்தரவு பிறப்பிக்க இயலாது என்றும், அவர் அமைச்சரவையில் நீடிக்க வேண்டுமா என்பது முதலமைச்சர் முடிவு  எடுக்க வேண்டும்’ என அறிவுறுத்தி முடித்து வைத்தனர். 


இந்நிலையில் இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில்  வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கானது நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, உஜ்ஜல்புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரிக்கிறது.