ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில், சுற்றுலாப் பயணிகள் மீது ஏப்ரல் 22-ம் தேதி, தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அங்குள்ள ரிசார்ட் ஒன்றில் சுற்றுலாப் பயணிகள் கேளிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் சுட்டதில், 26 பேர் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் ஆண்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக, சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இஸ்லாமியர் அல்லாதவர்களை அவர்கள் சுட்டுக்கொன்றதாக, உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
பதிலடி எப்போது என எதிர்பார்த்த மக்கள்
இந்தநிலையில் இந்த சம்பவத்திற்கு தீவிரவாதிகளுக்கு பதிலடி எப்போது கொடுக்கப்படும் என எதிர்பார்ப்பு இந்தியா முழுவதும் இருந்து வந்தது. இன்று இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில், போர் பாதுகாப்பு ஒத்திகை நடத்த மத்திய அரசு அறிவுறுத்தல் கொடுத்திருந்தது. இந்தநிலையில் இரவு இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை இணைந்து கூட்டு ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக தீவிரவாதி முகாம்களை குறி வைத்து 9 இடங்களில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அளித்துள்ளது.
இந்திய அரசு தெரிவித்தது என்ன ?
இதுகுறித்து இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்:“ மொத்தம், 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டுள்ளன. எங்கள் நடவடிக்கைகள் கவனமான முறையில், கணக்கிடப்பட்டு, துல்லியமாக செயல்படுத்தப்பட்டன. எந்த பாகிஸ்தான் ராணுவ முகாம்களும் இந்த தாக்குதலின் போது குறிவைக்கப்படவில்லை. இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதிலும் செயல்படுத்தும் முறையிலும் இந்தியா நிதானத்தைக் காட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த செய்தி குறிப்பில், 25 இந்தியர்களும் 1 நேபாள குடிமகனும் கொல்லப்பட்ட காட்டுமிராண்டித்தனமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் விளைவுகளை எதிர்கொள்வார்கள் என்ற நாங்கள் உறுதியளிக்கிறோம். 'ஆபரேஷன் சிந்தூர்' பற்றிய விரிவான விளக்கம் இன்று அளிக்கப்படும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தாக்குதல் நடந்த இடங்கள் ?
கோட்லி, பஹ்வல்பூர் மற்றும் முசாபராபாத் ஆகிய இடங்களில் தாக்குதல் நடந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில், இந்தியா எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆப்ரேஷன் சிந்தூர் என்றால் என்ன ?
தீவிரவாத தாக்குதலின் போது, ஆண்கள் மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டனர். இதனால் பெண்களின் புனிதமாக பார்க்கப்படும், குங்குமம் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையிலேயே பெண்கள் நெற்றியில் வைக்கப்படும் குங்குமத்தின் பெயராக சிந்தூர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.