உதயநிதியைப் பின்தொடர்ந்து சினிமாவில் அடியெடுத்து வைக்கும் பிரபலமான அரசியல் வாரிசு குறித்த தகவல் கோடம்பாக்கம் வட்டாரங்களில் பரவி வருகிறது..


சினிமாவிலும், அரசியலிலும் ஒரே நேரத்தில் வளர்ச்சியையும், மக்களின் ஆதரவையும் ஈர்த்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். தமிழ் சினிமாவில் நடிகராக முன்னணி வேடங்களில் நடித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். நடிகர்கள் விஜய், த்ரிஷா, மணிவண்ணன் முதலானோர் நடித்த `குருவி’ திரைப்படத்தைத் தனது ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார் உதயநிதி. நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய `ஆதவன்’ திரைப்படத்தில் ஒரு காட்சியில் தோன்றியதே உதயநிதி திரையில் தோன்றிய முதல் முறை. அதன்பிறகு 4 திரைப்படங்களைத் தயாரித்தார் உதயநிதி ஸ்டாலின். 


அரசியல், சினிமா இரண்டிலும் பயணம்.. உதயநிதி எம்.எல்.ஏவைப்போல் திரைத்துறையில் களமிறங்குகிறாரா பிரபல அரசியல் வாரிசு?


தொடர்ந்து `ஒரு கல் ஒரு கண்ணாடி’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார் உதயநிதி. காமெடி, பாடல்கள் என அனைத்து சரியாக செயல்பட்டதில், அவருக்கு இந்தப் படம் மக்கள் மத்தியில் பிரபலத்தை ஈர்த்துக் கொடுத்தது. தொடர்ந்து தான் தயாரித்த திரைப்படங்களிலேயே நடித்து வந்த உதயநிதி, அடுத்தடுத்து பிற தயாரிப்பாளர்களின் திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். அவர் நடித்த சில திரைப்படங்கள் தோல்வியையும் தழுவியிருக்கின்றன. கமர்ஷியல் திரைப்படங்களில் மட்டும் நடித்து வந்த உதயநிதி, தொடர்ந்து `மனிதன்’, `கண்ணே கலைமானே’, `சைக்கோ’ முதலான திரைப்படங்களில் மாறுபட்ட வேடங்களிலும், சமூக கருத்துகளைப் பேசும் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார் உதயநிதி. 


தற்போது உதயநிதி ஸ்டாலின் `கண்ணை நம்பாதே’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், `கனா’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அருண்ராஜா காமராஜ் இயக்கி வரும் `நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது இந்தியில் வெளியாகி, பலரையும் திரும்பி பார்க்க வைத்த `ஆர்டிகிள் 15’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். மேலும் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்தில் உதயநிதி நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் தொடக்கப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



சினிமாவில் ஒருபக்கம் மும்முரமாக கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் அதே வேளையில், அரசியலிலும் கலக்கி வருகிறார் உதயநிதி. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக சட்டமன்றத்தில் வலம் வரும் உதயநிதி, திமுகவின் மாநில இளைஞரணி செயலாளராக கட்சியின் அடுத்த கட்ட முகமாக வளர்ந்து வருகிறார். உதயநிதியின் வேலை ஸ்டைலின் வெற்றியைத் தொடர்ந்து அவரைப் போலவே தமிழ் சினிமாவில் களம் இறங்க திட்டமிட்டுள்ளார் அரசியல் வாரிசு ஒருவர். 


தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தேனி நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பியாக இருக்கிறார். அவர் தற்போது தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருப்பதாக சினிமா வட்டாரங்களில் பெரிதும் பேசப்படுகிறது. நல்ல திரைப்படங்களைத் தயாரிப்பதற்கும், நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பதற்கும் அடிக்கடி திரைப்பட இயக்குநர்களை ரவீந்திரநாத் சந்தித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.