தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய மொபைல் வழியாக டிக்கெட் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் மெட்ரோ ரயில்கள் முக்கிய போக்குவரத்து சாதனங்களில் ஒன்றாக திகழ்கிறது. விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையும் இருவழித்தடங்களில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் பயணிக்கின்றனர். செல்ல வேண்டிய இடங்களுக்கு எந்தவித சிரமுமின்றி விரைந்து செல்ல முடியும் என்பதால் பலரின் முதன்மை விருப்பமாக மெட்ரோ ரயில்கள் உள்ளது. 


இப்படியான நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இதேபோல் க்யூ ஆர் கோடு மூலம் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெறும் முறையும் நடைமுறையில் இருந்தது. இதனால் டிக்கெட் கவுண்டர்களில் பயணிகள் காத்திருக்கும் நிலைக்கு முடிவு கட்டப்பட்டது. இந்த வசதிகள் பயணிகள் இடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.






இந்நிலையில் மெட்ரோ நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”மொபைல் பயன்பாடு உள்ளிட்ட ஆன்லைன் டிக்கெட்டுகள் பெறுவது தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக தற்சமயம் வேலை செய்யவில்லை. எனவே பயணிகள் மெட்ரோ ரயில் நிலைய கவுன்டர்களில் டிக்கெட் வாங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கோளாறை சீரமைக்கும் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு மெட்ரோ நிர்வாகம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இன்று விடுமுறை முடிந்து அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரி, பேருந்து மற்றும் ரயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்பதால் தங்கள் பயணங்களை திட்டமிட்டு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.