சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேருதான் என்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பேரன் தெரிவித்துள்ளார். மேலும், முதல் பிரதமர் நேதாஜிதான் என்ற கங்கனாவின் கருத்துக்களை மறுத்து, கடுமையாக விமர்சனம் வைத்துள்ளார்.
மக்களவை தேர்தல்:
நாடாளுமன்றத்தின் 18வது மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1 ஆம் தேதி நிறைவடைகிறது. தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் பரப்புரை மற்றும் கூட்டங்களில் அரசியல் கட்சியினர் சிலர் பேசுவது பெரும் சர்ச்சைகளையும் ஏற்படுத்துகிறது என்றே சொல்லலாம்.
சில தினங்களுக்கு முன்பு, நடிகையும் பாஜக கட்சியின் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான கங்கனா ரனாவத் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர், செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த போது, சுதந்திர நாட்டின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திர போஸ் என குறிப்பிட்டு பேசினார். இக்காட்சியை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து, கேலி செய்தனர்.
மறுக்கும் கங்கனா:
ஆனால், பலரும் விமர்சித்ததை தொடர்ந்து, தான் பேசியது சரிதான் என்றும், ஒரு பதிவையும், ஸ்கீர்ன் சாட்டையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். அதில், சுபாஷ் சந்திர போஸ் 1943 ஆண்டு சிங்கப்பூரில் இருந்து சுதந்திர இந்தியாவுக்கான அரசாங்கத்தை அமைத்தார் என்றும், தானே அந்த அரசாங்கத்தின் பிரதமர் என்றும் அரசாங்கத்தின் தலைவர் என்றும் அறிவித்து கொண்டார் என்றும் அறிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கவனிக்க வேண்டிய இரண்டு விசயம் என்னவென்றால், முதலாவதாக சுபாஷ் சந்திர போஸ் சிங்கப்பூரில் சென்று அரசாங்கத்தை அமைத்து, தனக்குத்தானே அறிவித்தார் என்று சிலர் கூறுகின்றனர், சிலர் சிங்கப்பூரில் உள்ள மக்களால் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றும் சிலர் கூறுகின்றனர். இதிலிருந்து இந்தியாவுக்கான பிரதமராக அதிகாரப்பூர்வமாக, இந்தியாவிலுள்ள மக்களாலும், அப்போதிருந்து காங்கிரசாலும் அறிவிக்கப்பட்டாரா என்றால் இல்லை என்று பதில்.
இரண்டாவதாக, கங்கனா ராவத் கூறியது, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்று. ஆனால், சுதந்திரம் அடைந்த பின் முதல் பிரதமர் நேரு தான் என்பது அதிகாரப்பூர்வமாகவும், இந்திய மக்களாலும் பிரதரமராக நேரு ஏற்றுக்கொள்ளப்பட்டார் என்பது அனைவரும் அறிந்தது.
போஷின் பேரன் கருத்து:
இந்நிலையில், சுபாஷ் சந்திர போஸின் பேரன், சந்திர போஸ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது, "சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேருதான், அதுதான் வரலாறு. அதை யாரும் மாற்ற முடியாது. நேதாஜி மற்றும் நேரு இடையே கருத்துக்கள் ரீதியான வேறுபாடுகள் கொண்டிருந்தாலும் பரஸ்பரம் மரியாதை கொண்டிருந்தனர். நேதாஜியை வைத்து, நேரு மற்றும் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது.
கங்கனா ராவத் திறமை வாய்ந்த நடிகை. ஆனால், அவர் வரலாறு குறித்தான தகவலை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும், வாட்சப் பல்கலைக்கழத்தில் இருந்து தவிர்த்து பேச வேண்டும் என விமர்சித்துள்ளார். இந்திய சுதந்திர போராட்டத்தின் போது இருந்த காங்கிரஸ் குறித்தான உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதுபோன்று கங்கனா ராவத் பேசுவது முதல் முறையா என்றால், இல்லை. பிரதமர் மோடி பதவியேற்றபின்புதான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்று தெரிவித்தது கடுமையான விமர்சனத்துக்குள்ளானது.