அலுவல்சாரா கல்விக்குழு உறுப்பினர்கள் பட்டியல் அண்மையில் ட்விட்டர் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தது. நந்தனம் கலைக்கல்லூரியின் பேராசிரியர் சுபவீரபாண்டியன் மற்றும் சென்னை பல்கலைக்கழகப் பேராசிரியர் வீ.அரசு ஆகியோர் புதிதாக இந்தக் கல்விக்குழுவில் அண்மையில் இணைக்கப்பட்டிருந்தனர். இதற்கிடையே தற்போது  ஒடிசா அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர்.பாலகிருஷ்ணன், ஆராய்ச்சியாளர் ஆ.இரா.வெங்கடாசலபதி, சமூகவியல் ஆராய்ச்சியாளர் வ.கீதா உள்ளிட்ட 14 பேர் அடங்கிய இந்தக் கல்விக்குழுவின் பட்டியல் ஆன்லைனில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. அதில், பாலகுருசாமி அரசுக்கு எதிர் சிந்தனை உடைய நபர் என்றும் அவரை எப்படிக் குழுவில் சேர்க்கலாம் என்றும் தொடர் கேள்வி எழுப்பி வந்தனர். மேலும் வலதுசாரி சிந்தனை உடைய பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி ஆகியோர் பெயரும் அந்தப் பட்டியலில் இருந்தது தொடர் சர்ச்சையைக் கிளப்பியது. 




சிலர், ‘பத்ரி போன்றவர்களைப் பட்டியலில் சேர்க்க வேண்டிய அவசியம் என்ன? பாஜகவினர் இதுபோலச் செய்வார்களா?’ எனவும் திமுக ஆதரவாளர்கள் சிலரே கேள்வி எழுப்பியிருந்தனர். 



ஆனால் உண்மையில் நடந்தது என்ன?,  இதுகுறித்து விளக்கமளித்துள்ள பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி, ‘இந்த கமிட்டி கடந்த அதிமுக ஆட்சியில்தான் பெரும்பாலும் உருவாக்கப்பட்டது. முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உட்பட அனைவரும் கடந்த ஆட்சியில்தான் இந்தக் குழுவில் இணைக்கப்பட்டோம். குழுவில் இருந்த சிலர் ஏற்கெனவே மரணமடைந்ததை அடுத்து அவர்கள் இருந்த இடத்தில் சில பேராசிரியர்கள் நியமனம் மட்டும் இந்த ஆட்சியில் நடந்தது. அதன்படியே பேராசிரியர் சுப.வீரபாண்டியனும் பேராசிரியர் வீ.அரசுவும் இந்தக் கல்விக்குழுவில் நியமிக்கப்பட்டனர். குழு கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட நிலையில் சிலமுறை மட்டுமே அனைவரும் ஒன்றுகூடியிருக்கிறோம். இந்த ஆட்சியில் வருகின்ற சனிக்கிழமை அன்று அனைவரும் சந்திக்க இருக்கிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.