ஆன்லைன் ரம்மி தடைச்சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பியனுப்பியது குறித்து சபாநாயகர் அப்பாவு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “ இணையவழி ரம்மியை தடை செய்யவேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்வையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. 


கடந்த அக்டோபர் 28ம் தேதி அனுப்பப்பட்ட இந்த மசோதாவைத 8-ஆம் தேதிவரை ஆளுநர் ஆய்வு செய்தார்களா என்பது குறித்து தெரியவில்லை. அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு, சட்ட முன்வடிவம் கொண்டு வரப்பட்டு மசோதாநிறைவேற்றப்பட்டது. இதற்கு ஏன் ஆளுநர் காலம் தாழ்த்தினார் என்பது தெரியவில்லை. காலம் தாழ்த்தப்பட்டு நேற்று முன் தினம் அது திருப்பி அனுப்பப்பட்டது. 


ஆளுநரின் உரிமை என்பது உச்சநீதிமன்றம் வரை தற்போது என்னென்ன உரிமைகள் இருக்கிறதோ, எந்தெந்த மாநில அரசுகள் இருக்கிறதோ, அமைச்சர்கள் இருக்கிறதோ, அமைச்சரவையில் இருக்கிறதோ அவர்களுடன் இணைந்து ஆளுநர் பணியாற்ற வேண்டும். 


இந்திய அரசியலமைப்பு சட்டம் 200ல் மிக தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆளுநர் அவர்கள் சட்டமன்றதால் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தை ஒப்புதலுக்கு சென்றால், ஒப்புதல் அளிக்கலாம் அல்லது விளக்கம் கேட்கலாம். குடியரசு தலைவருக்கு அனுப்பலாம். 


சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை நிறைவேற்ற அதிகாரம் இல்லை என்று ஆளுநர் எந்த சட்டத்தின் அடிப்படையில் சொன்னார் என்பது தெரியவில்லை. சட்டமன்றம் என்பது புனிதமானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதற்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் அந்த வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்திருக்கலாம். இதுதான் எங்களுடைய விருப்பமும் கூட... அதிகாரமில்லை என்று கூறியது தவறானது. அதை திரும்ப படித்துவிட்டு சரியான வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கலாம்.


நேற்று கூட தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ரொம்ப தெளிவாக சொல்லிருந்தார். அதில், மத்திய அரசின் பட்டியலில் இடம்பெற்றிருந்த திறமையான விளையாட்டுகள் என ஆன்லைன் ரம்மி இருந்தது. அந்த மத்திய பட்டியலிலும் இந்திய சட்ட ஆணையம் 276வது பிரிவின் கீழ் அறிக்கையை வெளியிட்டது. அதில் மாநில பட்டியலில் உள்ள எண் 34ல் அடிப்படையில் கடந்த தமிழக அரசு தடை செய்தது. அந்த சட்டத்தின் அடிப்படையில் நீங்கள் இந்த சட்டத்தை நிறைவேற்ற அனுமதில்லை என ஆளுநர் மறுத்துள்ளார். 


கடந்த 2021 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி உயர்நீதிமன்றம் ஆன்லைன் ரம்மியை தடை செய்தது. இதையெல்லாம் ஆளுநர் தெரிந்திருந்தால், தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு அனுமதி அளித்திருக்கலாம். இதை எதோ எடுத்தோம், கவிழ்த்தோம் என்று தமிழ்நாடு அரசு கொண்டு வரவில்லை. முன்னாள் நீதிபதி சந்துரு அவர்கள் தலைமையில் குழு அமைத்து ஆன்லைன் ரம்மி தேவையா? இல்லையா? என்று கருத்துக்கேட்டே சட்டமன்றத்தில் நிறைவேற்றினோம். இந்த சட்டத்திற்கு எதிராக ஆளுநர் செயல்பட்டுள்ளார். முன்பு ஆன்லைன் அவரச தடை சட்டத்திற்கு அனுமதி அளித்த ஆளுநர், யாருடைய அழுத்தத்தின் பெயரில் மாற்றி முடிவு எடுத்தார். ஒப்புதல் அளிக்காமலிருக்க ஆளுநருக்கு எங்கிருந்து அழுத்தம் வந்தது என தெரியவில்லை. ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்ட மசோதாவை நிறைவேற்ற பேரவைக்கு அதிகாரம் உள்ளது. ” என்று தெரிவித்தார்.