ஆன்லைன் ரம்மியை விதிமுறைப்படி எப்படி நடத்தலாம் என்று பாஜக அரசு விதிகளை வகுத்துக் கொண்டிருப்பதாலேயே ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் இழுத்தடித்து வருவதாக முரசொலி குற்றம் சாட்டியுள்ளது.


ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தமிழ்நாட்டில் 44 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதனை தடை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகளிடமிருந்து கோரிக்கை வலுத்துவந்தது. இந்த நிலையில் ஆன்லைன் தடை மசோதாவை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது தமிழ்நாடு அரசு. மசோதாவை 4 மாதங்களாகக் கிடப்பில் போட்டிருந்த ஆளுநர் அதனை நேற்று முன் தினம் தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பினார். இது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி ஆளுநரை விமர்சித்து கட்டுரை வெளியிட்டுள்ளது. 


அதில், “ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யும் சட்டத்தை நிறைவேற்றி அனுப்பி 4 மாதங்கள் ஆனபிறகு, 'இப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்றுவதற்கு சட்டமன்றத்துக்கு அதிகாரமில்லை' என்று கண்டுபிடித்திருக்கிறார் ஆளுநர் ஆர்.என். இரவி. பிறந்த குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டுபிடிக்கவே அவருக்கு நான்கு மாதம் தேவைப்பட்டு இருக்கிறது. 'இவர்தான் துரிதமாக முடிவெடுக்க வேண்டும் என்று தினந்தோறும் வகுப்பு எடுத்துக் கொண்டு இருக்கிறார். தமிழ்நாடு சட்டமன்றம் சட்டம் இயற்றுவதற்கும - ஆளுநர் ஏற்றுக் கொள்ளாமல் திருப்பி அனுப்பியதற்கும் இடையில் 44 பேர் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள் இன்னும் எத்தனை உயிர்கள் அந்த பலிபீடத்துக்குத் தேவை என்று தெரியவில்லை” என்று கூறியுள்ளது.


ஆசை காட்டி மோசடி நடக்கும் விளையாட்டு என்ற பெயரால் ஏமாற்றுதல் நடக்கும் - இதனால் பலரது பணமும் பறிக்கப்படும் - தற்கொலைகள் நடக்கும் - குடும்பங்கள் அழியும் - அதனை ஒரு மாநில அரசு பார்த்துக் கொண்டு கைகட்டி வேடிக்கை பார்க்க வேண்டுமா? சட்டம் ஒழுங்கைக் காப்பதும், மக்களைக் காப்பதும். மோசடியாளர்களை முடக்குவதும், ஏமாற்றுக்காரர்களைத் தடுப்பதும் மாநில அரசின் கடமை அல்லவா? அந்தக் கடமையைச் செய்யக் கூடாது என்று ஒரு மாநிலத்தின் ஆளுநரே சொல்கிறார். இதனை விட 'சட்டவிரோதம்' இருக்க முடியுமா? யாருக்குச் சார்பானவர் இந்த ஆளுநர்?” என்று முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.


ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஆளுநரை வந்து சந்தித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதனை இன்னமும் ஆளுநர் மாளிகை மறுத்ததாகத் தகவல் இல்லை. இப்போது இந்தச் சட்டம் திருப்பி அனுப்பப்படுவதற்குப் பின்னணி யார் என்பதை அடையாளம் காண்பது ஊடகங்களுக்குச் சிரமம் அல்ல, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஆன்லைன் ஆதாட்டத் தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.


அதனை சென்னை உயர் நீதிமன்றம் பரிசீலித்து புதிதாக சில ஆக்கபூர்வமான திருத்துங்களோடு, புதிய சட்டங்களைக் கொண்டு வாருங்கள் என்று சொன்னது இப்படி ஒரு சட்டம் நிறைவேற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உயர் நீதிமன்றம் சொல்லவில்லை. மாநில அரசு சட்டம் இயற்றலாம்” என்று தான் நீதியரசர்கள் சொன்னார்கள், அந்த உத்தரவுக்கு ஏற்பத்தான் இந்தச் சட்டமே இயற்றப்பட்டது. ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்து தமிழ்நாடு அரசு அவசரச் சட்டம் இயற்றி, கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி ஆளுநர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தது. ஆளுநர் ஆர்.என்.ரவி, அன்றைய தினமே அதனைப் பரிசீலித்து உடனடியாக ஒப்புதல் அளித்தார். மாநில அரசுக்கு உரிமை இல்லை என்று அப்போது அவருக்குத் தெரியவில்லை.


இதனைத் தொடர்ந்து, அவசரச் சட்டத்துக்கு மாற்றாக நிரந்தரச் சட்டம் கொண்டு வர முடிவு செய்து, தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்ட மசோதா 2022-ஐ சட்டசபையில் தாக்கல் செய்து, நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்காக அதே அக்டோபர் 28-ஆம் தேதி தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது. உடனடியாக ஒப்புதல் தராமல் இழுத்தடிக்கத் தொடங்கினார். என்னாச்சு, என்னாச்சு என்று கேட்டபிறகு, ஒப்புக்கு அர்த்தமற்ற கேள்விகளை எழுப்பி திருப்பி அனுப்பினார்.


தனக்கு சில சந்தேகங்கள் இருப்பதாகச் சொல்லி கடந்த நவம்பர் 24-ஆம் தேதி தமிழ்நாடு அரசுக்குக் கடிதம் எழுதினார் ஆளுநர். இந்தக் கடிதம் கிடைக்கப்பெற்ற, அடுத்த 24 மணி நேரத்திற்குள் தமிழ்நாடு அரசு விளக்கக் கடிதத்தை அனுப்பி வைத்தது. ஆளுநரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க அனுமதி கேட்டும், நேரம் ஒதுக்கப்படவில்லை.


தமிழ்நாடு அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச் சட்டம் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் சட்டசபை கூடிய நாளில் இருந்து 6 வாரங்களில் அவசரச் சட்டம் தானாகவே காலாவதி ஆகி விடும். அவசரச் சட்டம் காலாவதியாகியுள்ள நிலையில் ஆன்லைன் சூதாட்டம் முழுவீச்சில் மீண்டும் நடைபெற்றது. 


கடந்த மார்ச் 1 ஆம் தேதி அகில இந்தியத் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் , “ஆன்லைன் ரம்மியைத் தடை செய்ய ஒரு சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றி அனுப்பினோம், அதனைக் கூட இங்கே ஆளுநராக இருப்பவர் அனுமதிக்கவில்லை. மகாபாரதத்திலேயே சூதாட்டம் இருக்கிறதே என்று நினைத்து தடை செய்ய மறுக்கிறார்களா?” என்று கேட்டார். இதன்பிறகுதான் ஆளுநருக்கு ரோஷம் வந்திருக்கிறது. அப்போதும் தனது ஆன்லைன் ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று மொத்தமாக போட்டு மூடப் பார்க்கிறார்.


ஆன்லைன் ரம்மியை மொத்தமாகத் தடை செய்ய தி.மு.க. அரசு திட்டமிட்டு அதற்கான அவசரச் சட்டத்தைத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றிய நிலையில் - ஆன்லைன் ரம்மியை விதிமுறைப்படி எப்படி நடத்தலாம் என்று அதற்கான விதிகளை வகுக்கத் தொடங்கி இருக்கிறது பா.ஜ.க. அரசு. இதனால்தான் இழுத்தடிக்கிறார் ஆளுநர்,


ஆன்லைன் விளையாட்டு என்பது 200 மில்லியன் அமெரிக்க டாலர் தொழிலாகும். இதனை புத்தாக்க நிறுவனங்கள் எனப்படும் ஸ்டார்ட் அப் தொழிலாகவே பா.ஜ.க. அரசு பார்க்கிறது” என்று ஒன்றிய தகவல் தொழில் நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கடந்த ஜனவரி மாதம் சொலவி இருக்கிறார், இதுநான் ஆளுநரின் இந்த நிலைப்பாட்டுக்குக் காரலாம்.


'ஆன்லைன் ரம்மியைத் தடை செய்யக் கூடாது. அது மிக நல்ல விளையாட்டு, அறிவுக்கூர்மைக்கு எடுத்துக்காட்டு, மகாபாரத காலத்தில் இருந்து தொடர்வது, அதனை தடை செய்யக் கூடாது. நல்ல ஒரு மாநில அரசு அதனை ஊக்கப்படுத்த வேண்டும்' என்று மிகத் தைரியசாலியான ஆளுநர் சொல்லலாமே? அதை விட்டுவிட்டு, 'மாநில அரகக்கு அதிகாரம் இல்லை' என்று எதற்காகப் பதுங்க வேண்டும்? ஆளுநரின் உண்மை முகம் இதுதான். ஆரியம், திராவிடம் சனாதனம் என்று அவர் பேசுவது எல்லாம் திசை திருப்பும் தந்திரங்களே” என்று ஆளுநரை முரசொலி விமர்சனம் செய்துள்ளது.