தமிழ்நாட்டில் உள்ள அரசு  மருத்துவக்கல்லூரி, பல்மருத்துக்கல்லூரி, இஎஸ்ஐசி மருத்துவக்கல்லூரி,  தனியார் மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக்கல்லூரி, தனியார் பல்கலைக்கழகங்கள், வேலூர் கிருத்துவ மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை தேர்வு செய்வதற்கு 25 ஆம் தேதி முதல்  ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.


மேலும் மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் ஆகஸ்ட் 4,5 ஆகியத் தேதிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 6-ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் ஒதுக்கீட்டு ஆணைகளை பதிவிறக்கம் செய்துக் கொண்டு, 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


2023 – 2024-ஆம் ஆண்டின் இளநிலை மருத்துவம் (MBBS) மற்றும் பல் மருத்துவம் (BDS) ஆகிய படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள் ,  சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவப் கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவ இடங்கள் சேருவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் ஜூன் 28 ஆம் தேதி முதல் ஜூலை 12ந ஆம் தேதி வரையில் பெறப்பட்டன.


2023-24 ஆம் ஆண்டிற்கான அரசு மருத்துவகல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ் படிப்பில்  6326 இடங்களும், அரசு பல் மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில்  பிடிஎஸ் படிப்பில் 1768 இடங்களும் நிரப்பப்பட உள்ளது.


இந்த நிலையில் மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் உள்ள இடங்களில் சேர்வதற்கு ஜூன் 25 ஆம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரையில் தரவரிசை எண் 1 முதல் 25,856 வரையிலும், நீட் தேர்வு மதிப்பெண் 720 முதல் 107 மதிப்பெண் வரை பெற்றவர்கள் பங்கேற்கலாம்.


அதேபோல் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் உள்ள இடங்களில் சேர்வதற்கு ஜூன் 25 ஆம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரையில் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான தரவரிசை எண் 1 முதல் 13,179  வரையிலும், நீட் தேர்வு மதிப்பெண் 720 முதல் 107 மதிப்பெண் வரை பெற்றவர்கள் பங்கேற்றலாம். இவர்களுக்கான இடங்கள் ஆகஸ்ட் 1,2 ஆகியத் தேதிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 3 ந் தேதி கல்லூரியின் இடங்கள் ஒதுக்கீடு செய்து அளிக்கப்படும். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.


இந்த நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்களை தேர்வு செய்யும் மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் இடங்களை தேர்வு செய்வதற்கு விருப்ப பதிவுகளை செய்வதற்கான காலத்தை நீட்டித்துள்ளது.


மாணவர்கள் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை தாங்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்யலாம் அவர்களுக்கான ஒதுக்கீடு ஆகஸ்ட் 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் செய்யப்பட்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி ஒதுக்கீட்டானை இணையதளத்தில் வெளியிடப்படும். மாணவர்கள் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை தாங்கள் தேர்வு செய்து ஒதுக்கீடு பெற்ற கல்லூரியில் சேர வேண்டும் என மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது.


அகில இந்திய ஒதுக்கீட்டு கூறிய இடங்களை தேர்வு செய்யும் தமிழ்நாடு மாணவர்கள் தமிழகத்தில் உள்ள வேறு கல்லூரிகளும் இடங்களை தேர்வு செய்து அந்த இடங்கள் காலியாக கூடாது என்பதற்காகவும் அவர்களுக்கும் வாய்ப்பு தமிழகத்தில் வழங்க வேண்டும் என்பதற்காக கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.  அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் விளையாட்டு மாற்றுத்திறனாளிகள் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு 27 ஆம் தேதி நேரடியாக கலந்தாய்வு நடத்தி அந்த இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.


மாணவர்கள் விண்ணப்பப்பதிவு கட்டணமாக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 500 ரூபாயும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 1000 ரூபாய் செலுத்த வேண்டும். மேலும் வைப்புத்தொகையாக மருத்துவம் , பல் மருத்துவக் கல்லூரி,  மாநில தனியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றிக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கான கலந்தாய்வில் பங்கேற்பதற்காக ரூ.30,000 செலுத்த வேண்டும். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்பும் மாணவர்கள் 1 லட்சம் வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும்.  கலந்தாய்வு, கல்லூரிகளின் விபரங்கள் மற்றும் கட்டண விபரம்  www.tnhealth,tn.gov.in and www.tnmedicalselection.org  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.