ஆன்லைன் சூதாட்ட இழப்பு தற்கொலைகள் கூடாது என்றும் மீண்டு வரப் போராட வேண்டும் எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 


இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகள்:


’’தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குப்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாரிசெல்வம் என்ற தனியார் வங்கி ஊழியர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட கடனை அடைக்க முடியாததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


தீர்வு தற்கொலை அல்ல


ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான மாரிச் செல்வம் அதில் பணத்தை இழந்ததால் ரூ.25 லட்சம் கடனாளி ஆனதாகவும், அதில் ரூ.10 லட்சத்தை அடைத்த அவர், மீதமுள்ள கடனை அடைக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அவரது மன உளைச்சலுக்கான காரணத்தை புரிந்துகொள்ள முடிகிறது.  ஆனால், அதற்கான தீர்வு தற்கொலை அல்ல. மாரிச்செல்வத்தின் தற்கொலையால் அவரது குடும்பம் ஆதரவற்று போயிருகிறது. தற்கொலை செய்வதற்கு மாறாக கடனில் இருந்து மீண்டு வர போராடியிருக்க வேண்டும்.


தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் லட்சக்கணக்கான குடும்பங்களை கடனாளி ஆக்கியிருக்கிறது. 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு ஆன்லைன் சூதாட்டம் கடந்த ஏப்ரல் மாதத்தில் தடை செய்யப்படும் வரை 49 பேர் தற்கொலை செய்து கொண்டனர். பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய தொடர் போராட்டத்தின் பயனாக ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டிருக்கிறது. 


மன உளைச்சலில் இருந்து மீண்டு வர மன நல ஆலோசனை


இனி எவரும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாவதோ,  பணத்தை இழப்பதோ, தற்கொலை செய்து கொள்வதோ நிகழாது. அதே நேரத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்கனவே பணத்தை இழந்தவர்கள் அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்தும், தற்கொலை எண்ணத்திலிருந்தும் மீண்டு வர வேண்டும். அதற்காக அவர்களுக்கு மன நல ஆலோசனைகளை தமிழக அரசு வழங்க வேண்டும்’’.


இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.


தடையை மீறி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவோருக்கு என்ன தண்டனை?



  • ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டால் 3 மாத சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் - இரண்டும் சேர்த்து தண்டனை வழங்கப்படும்.

  • சூதாட்டத்தை நடத்துபவருக்கு ரூ. 10 லட்சம் அல்லது 3 ஆண்டுகள் சிறை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை வழங்கப்படும்.

  • தெரிந்தே இரண்டாவது முறையாக தவறு செய்யும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு முந்தைய தண்டனையை விட இரட்டிப்பாக தண்டனை வழங்கப்படும்.

  • ஒழுங்குமுறை ஆணையத்தால் விதிக்கப்படும் தண்டனைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது.

  • தமிழ்நாட்டிற்குள் எந்த ஒரு நபரும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடமுடியாதவாறு தடை அமல்படுத்தப்படும்.

  • செல்போன் எண்ணின் இருப்பிடத்தின் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்படும்.

  • சூதாட்ட நிறுவனங்களுக்கு ஆன்லைனில் பணப்பரிமாற்றம் செய்ய வங்கிகள் ஒத்துழைக்கவும் தடை.