ஆதிபராசக்தி சித்தர் பீடம் (Melmaruvathur Adhiparasakthi)


செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் அமைந்துள்ள, ஆதிபராசக்தி சித்தர் பீடம் மிகப் பிரசித்தி பெற்ற கோவிலாக ( melmaruvathur temple ) இருந்து வருகிறது. தமிழ்நாடு மட்டும் இல்லாமல் பிற மாநிலங்கள் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு, வருகை புரிவது வழக்கமாக உள்ளது. பிற கோவில்களை போல பெண் பக்தர்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் இந்த கோவிலில் கிடையாது. குறிப்பாக பெண் பக்தர்கள் கூட கோவில் கருவறைக்குசென்று அபிஷேகம் செய்ய முடியும் என்பதால், அதிகளவில் பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை புரிவது வழக்கம். அதே போல் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு சொந்தமான, ஏராளமான கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை ஆகியவை உள்ளன. இந்த கோவிலில் பல்வேறு வகையில் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.


 நீர்நிலை ஆக்கிரமிப்பு


நீர் நிலையை ஆக்கிரமிப்பு செய்து திருமண மண்டபத்தின் ஒரு பகுதி கட்டப்பட்டிருந்தது என கூறி திருமண மண்டபம் இடிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், சோத்துப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் மேல்மருவத்தூர் மற்றும் பல்வேறு நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக வழக்குகள் தொடுத்து, நீதிமன்றம் மூலம் பல உத்தரவுகளை பெற்றுள்ளார். அதேபோன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பல தகவல்களை பெற்று, அதன் மூலம் வழக்கு தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில் ராஜூ கடந்த 2022 ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான சர்வே எண் 12 ஆக்கிரமிப்புகள் இருப்பதாக வழக்கு தொடர்ந்தார். அதேபோன்று மாநில நெடுஞ்சாலைக்கு சொந்தமான சர்வே எண் 13 /1 இடத்திலையும் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.




இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிபதி, உடனடியாக, இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்தால், 3 வாரத்திற்குள் அகற்ற உத்தரவு பிறப்பித்துள்ளார். முன்னதாக நீதிமன்றத்தில் அப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் இருப்பதை சம்பந்தப்பட்ட துறையினரும் ஏற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலை ஒட்டிய நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.


தமிழ்நாடு அரசு உறுதி


இதுகுறித்து வழக்கு தொடர்ந்த ராஜா நம்மிடம் தெரிவிக்கையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகள் இருக்கிறதா என கேள்வி எழுப்பிய போது அந்த பகுதியில் ஆக்கிரமிப்புகள், இருப்பதாக தகவல் தெரிவித்து இருந்தனர். அதேபோன்று அந்த ஆக்கிரமிப்புகள் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகள் என தெரிய வந்தது. ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அடிகளாரின் மகன் தேவி பெயரில், இருப்பதும் சுமார் அங்கு 60 கடைகள் செயல்பட்டு வருவது தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவில் தெரிய வந்தது.




 இரண்டு நுழைவு வாயில்கள்


அதேபோல் இந்த பகுதியில் வருடத்திற்கு சுமார் 40க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஆக்கிரமிப்பை அகற்றும் பட்சத்தில், விபத்துக்கள் குறையும் என தெரிவித்தார். அதே போன்று மேல்மருவத்தூர காவல் நிலையம் மற்றும் தபால் நிலையத்திற்கு செல்ல வழி இல்லை என்பதால் அதற்கு வழி ஏற்படுத்தி தர நீதிபதி அறிவித்துள்ளார். மூன்று வாரங்களுக்குள் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என உத்தரவு கூறப்பட்டுள்ளதாக ராஜா நம்மிடம் கூறினார். குறிப்பாக மேல்மருவத்தூர் கோவிலுக்கு சொந்தமான இரண்டு நுழைவு வாயில்கள், 60 கடைகள், உள்ளிட்டவை இந்த ஆக்கிரமிப்பில் உள்ளன என கூறுகிறார் ராஜா