ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு எதிரான வழக்குகளில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு 
தெரிவித்துள்ளது. ஜூலை 13ஆம் தேதி, இறுதி விசாரணைக்கு எடுத்து கொள்வதாக தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது.


தமிழ்நாடு அரசு விதித்த தடையை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இந்த சூழலில், தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் இன்று அளித்த விளக்கத்தில், பொது அமைதி, சுகாதாரம், சூதாட்டம் தொடர்பாக மட்டுமே சட்டம் இயற்றப்பட்டதாகவும் சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளதாகதவும் தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது.


ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம்:



கடந்த 2022ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசு,  ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் முறைப்படுத்தல் சட்டத்தை இயற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆனால், ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் அரசுக்கு திருப்பி அனுப்பினார். மீண்டும் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு, ஆளுநர் கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி ஒப்புதல் அளித்தார்.


இந்த சட்டத்தை எதிர்த்து 69 ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட, அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.


கூட்டமைப்பு சார்பில் தாக்கல் செய்த மனுவில், "தமிழ்நாடு அரசின் தடை சட்டத்தால் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தமிழ்நாடு மட்டுமின்றி, நாடு முழுவதும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்கு முந்தைய நாளான ஏப்ரல் 6ஆம் தேதி மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை, ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவதற்கான திருத்த விதிகளை அறிவித்துள்ளது" என குறிப்பிடப்பட்டிருந்தது.


இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுப்பு:


இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி ஆஜரானார்.


அப்போது, வாதம் முன்வைத்த அவர், "ரம்மி திறமைக்கான விளையாட்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா மாநில அரசுகள், ஆன் லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து கொண்டு வந்த சட்டத்தை அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்கள் ரத்து செய்தது. அதனை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்குகளில் எந்த இடைக்கால உத்தரவையும் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை.


இந்த சட்டத்தின் அடிப்படையில், கடுமையான குற்ற நடவடிக்கைகள் எடுப்பதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதற்கு, தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆட்சேபம் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்த நீதிபதிகள், வழக்குகளை இறுதி விசாரணைக்காக ஜூலை 13ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.