புதுச்சேரி: புதுச்சேரி மக்கள் ஆன்லைனில் குறைந்த விலையில் பொருட்கள் கிடைப்பதாக நம்பி தாங்கள் ஏமாந்து விட்டதாக, இதுவரை 830 புகார்களை அளித்துள்ளனர். இதன் மூலம் கடந்த 9 மாதங்களில் ரூ.2.32 கோடியை  மக்கள் இழந்திருப்பதாக சைபர் க்ரைம் போலீஸார் தகவல்.


இது குறித்து சைபர் க்ரைம் போலீசார் கூறுகையில்... பொதுமக்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பொருட்களை வாங்குவது கடந்த மூன்றாண்டுகளில் பலமடங்கு அதிகரித்துவிட்டது. தற்போது இருக்கின்ற இணையதள வசதிகளில் நாம் வீட்டிலிருந்தே அனைத்து பொருட்களையும் வாங்குவதற்கு வலைதளங்கள் வந்துவிட்டது.


பிரபலமான வலைதளங்களில் சென்று ஏதேனும் ஒரு பொருளை வாங்க தேடி பார்த்துவிட்டு பிறகு வாங்கிக் கொள்ளலாம் என்று இணையத்தை விட்டு வெளியே வந்துவிட்டாலும் நாம் தேடிய அதே பொருளை மிக மிகக் குறைந்த விலைக்கு தருவதாகச் சொல்லி சமூக வலைதளங்களில் நமக்கு குறுச்செய்திகள் (notification) வந்து கொண்டே இருக்கும்.


 உதாரணத்துக்கு, பிரபலமான வலைதலத்தில் 900 ரூபாய்க்கு நாம் தேடிய ஒரு ஆடை 215 ரூபாய்க்கு கிடைப்பதாக இன்ஸ்டாவில் விளம்பரம் வரும். உடனடியாக அதே ஆடை அதே பிராண்ட் அதே கலர் மிக குறைந்த விலையில் கிடைக்கிறதே என நம்பி நாம் ஆர்டர் செய்தால் நமக்கு எந்தப் பொருளும் வராது. பெரும்பாலும் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவ - மாணவியர் இது போன்ற குறைந்த விலையில் கிடைக்கிறது என்று சமூக வலைதளங்களில் ஆர்டர் செய்து பணத்தை இழந்து வருவது அதிகரித்துள்ளது.


மேலும், சமூக வலைதளங்களில் மொத்தமாக ஆடைகள் விற்பனை செய்கிறோம் என பொய் விளம்பரங்களை செய்தும் ஏமாற்றுகின்றனர். உதாரணமாக, மெஷினரி, லிஃப்ட் மெஷினரி பொருட்கள், மோட்டார் உதிரி பாகங்கள், நிறுவனங்களுக்கு தேவையான பொருட்கள் போன்றவற்றை மார்க்கெட் விலையை விட பாதி விலைக்கு, மொத்த விலையில் தருகிறோம் என்று விளம்பரம் செய்யப்படுகிறது.


அந்த நிறுவனங்களை பற்றி எந்த விவரங்களையும் விசாரிக்காமல் சரி பார்க்காமல் அவர்களுடைய சமூக வலைதள விளம்பரத்தை மட்டும் நம்பி பொதுமக்கள் அவர்களிடம் ஆர்டர் செய்து பணத்தை இழந்து வருகின்றனர். அந்தவகையில் தற்போதுவரை 830க்கும் மேற்பட்ட புகார்கள் கடந்த 9 மாதங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.2.32 கோடியை புதுச்சேரி மக்கள் இழந்துள்ளனர்.


மேற்படி மோசடிக்காரர்களை தொடர்பு கொள்ள எந்த ஒரு விலாசமோ, மொபைல் எண்ணோ கிடைப்பதில்லை. வங்கி பரிவர்த்தனையை வைத்து மட்டும் இணைய வழி மோசடிக்காரர்களை பிடிப்பது மிக சிரமம் என்பதால் இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு இணைய வழி மோசடிக்காரர்கள் பொதுமக்களை சரளமாக ஏமாற்றி வருகின்றனர்.


ஆகவே பொதுமக்கள் சமூக வலைதளங்களில் இன்ஸ்டா கிராம், பேஸ்புக், வாட்ஸ்-அப், டெலி கிராம் போன்றவற்றில் வருகின்ற குறைந்த விலை பொருட்களை நம்பி ஆர்டர் செய்தால் 100% நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள். ஆகவே நம்பிக்கையான இணைய தளங்கள் மூலமாக மட்டும் பொருட்களை வாங்கி இணைய வழி மோசடிக்காரர்களிடம் சிக்காமல் இருங்கள். இணைய வழியில் வருகின்ற விளம்பரங்களை நம்பி எந்த பொருளையும் ஆர்டர் செய்ய வேண்டாம்" என்று சைபர்க்ரைம் போலீஸார் எச்சரித்து வருகின்றனர்.