திருப்பூர் பல்லடம் அருகே 4 பேர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்துவை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்கு மண்டலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் 4 கொடூரக் கொலைகள், பல்லடம் அடுத்த கள்ளக்கிணறு கிராமத்தில் உள்ள குறைகிணறு பகுதியில் நிகழ்ந்துள்ளது. கொல்லப்பட்டவர்கள் குறைகிணறு பகுதியைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் மற்றும் அவரது உறவினர்களான மோகன்ராஜ், புஷ்பாவதி, ரத்தினாம்பாள் ஆகியோர் ஆவர். செந்தில்குமாரிடம் ஓட்டுநராக பணியாற்றி வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர், தனது நண்பர்களுடன் நேற்று இரவு குறைதோட்டம் பகுதியில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைத் தட்டிக்கேட்ட செந்தில்குமாரை அவர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த மோகன்ராஜ், புஷ்பாவதி, ரத்தினாம்பாள் ஆகியோரையும் அந்த கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. இதில் 4 பேரும் ரத்த வெள்ளத்தில் மரணம் அடைந்தனர். தகவல் அறிந்த உறவினர்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கொலை நிகழ்ந்த இடத்தில் பல்லடம் டி.எஸ்.பி. செளமியா விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், செந்தில்குமாரிடம் வாகன ஓட்டுநராக வேலை செய்து வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த வெங்கடேசன், மோகன்ராஜிடம் வட்டிக்கு பணம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு வெங்கடேசனை வேலையை விட்டு செந்தில்குமார் நிறுத்திய அதேநேரம், மோகன்ராஜும் பணம் கேட்டு வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன், நண்பர்களுடன் அங்கு சென்று திட்டமிட்டு செந்தில்குமாரையும் மோகன்ராஜையைும் தடுக்க வந்த 2 பெண்களையும் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலைகள் தொடர்பாக மேற்கு மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி, மாவட்ட எஸ்.பி. சாமிநாதன் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று காலை பல்லடம் அரசு மருத்துவமனை முன்பு இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் ஏராளமான பா.ஜ.கவினர் குவிந்தனர். கோவை மேற்கு மண்டல தலைவர் பவானீஸ்வரி தலைமையில் 5 எஸ்.பிக்கள்,10 டி.எஸ்.பிக்கள் உட்பட 700 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குற்றவாளிகளை கைது செய்யும் வரை இறந்தவர்களின் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருச்சி மணப்பாறை சேர்ந்த செல்லமுத்துவை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
EPS: நாளுக்கு நாள் சீர்குலையும் சட்டம் - ஒழுங்கு: பல்லடம் படுகொலைக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!