தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து வருவதாக பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 


திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நிலத்தில் அமர்ந்து மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை, போதை கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


என்ன நடந்தது?


பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்துவந்தார். இவர் அரிசிக்கடை வைத்திருந்தார். அதேபகுதியில் உள்ள இவருக்கு சொந்தமான நிலத்தில் நேற்று (04/09/2023) இரவு மர்ம நபர்கள் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். இதை செந்தில்குமார் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது செந்தில்முகாரை அவர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர். மோகன்ராஜ். ரத்தினாம்பாள், புஷ்பவதி ஆகியோர் ஓடி வந்து தடுத்துள்ளனர். அவர்களையும் மது அருந்திய கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே செந்தில்குமார், மோகன்ராஜ், ரத்தினாம்பாள், புஷ்பவதி ஆகியோர் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 




இது தொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,  “செந்தில்குமாரின் அரிசி கடையில் குட்டி (எ) வெங்கடேசன் சில ஆண்டுகளுக்கு முன்பு வேலை பார்த்து வந்துள்ளார். அவர் தலைமையில் நேற்றிரவு ஒரு கும்பல் செந்தில்குமார் நிலத்தில் அமர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் செந்தில்குமார் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 3 பேரை அந்த கும்பல் வெட்டிவிட்டு தப்பியது.” என்று தெரிவித்தார்.


சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது - எடப்பாடி பழனிசாமி 


இதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,” திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் வீட்டின் முன் மது அருந்தியவர்களை தட்டி கேட்டதற்காக மோகன்ராஜ் என்பவரையும், அவரது தாயார் சகோதரர் மற்றும் சித்தி என நான்கு பேரை குடும்பத்துடன், போதை கும்பல் கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த  அரசு பதவியேற்றதிலிருந்து நாள்தோறும் நம் மாநிலம் கொலை கொள்ளை என கொலை மாநிலமாகவும் ,சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்த தமிழகமாகவும் , போதை பொருட்களின் தலைநகரமாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறது, இதனை சரி செய்ய வேண்டிய இடத்தில் உள்ள முதலமைச்சரோ வெற்று விளம்பரத்தில் மட்டும் தனது முழு கவனத்தையும் செலுத்தி கொண்டிருப்பது வெட்கக்கேடானது. காவல் துறையை கையில் வைத்துக்கொண்டு மக்களைக் காப்பாற்ற துப்பு இல்லாமல், நிர்வாக திறனற்ற பொம்மை முதலமைச்சருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.


இனியாவது காவல் துறையை தனது ஏவல் துறையாக மட்டும் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி, சட்ட ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டுமென்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன். மேலும் இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைவாகக் கண்டுபிடித்து, அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துவதோடு, உயிரிழந்த மோகன்ராஜ் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் , வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”என்று தெரிவித்துள்ளார். 


அண்ணாமலை கண்டனம்


இந்த விவகாரத்தில் கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, “ தினம் ஒரு கொலை தமிழகத்தில் நடந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கையில், அதற்குப் பொறுப்பான காவல்துறையைக் கையில் வைத்துக்கொண்டு, நம்பர் ஒன் முதலமைச்சர் என்று விளம்பரம் செய்ய வெட்கமாக இல்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். 


இரங்கல்


” குடியிருப்புப் பகுதியில் மது அருந்தியதைத் தட்டிக்கேட்ட, பல்லடம் சட்டமன்றம் பொங்கலூர் மேற்கு ஒன்றியம் மாதப்பூர் பஞ்சாயத்து கிளை தலைவர் சகோதரர் மோகன்ராஜ் சமூகவிரோதிகளால் குடும்பத்துடன் வெட்டிக் கொல்லப்பட்ட செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். மோகன் ராஜ் அவரது தம்பி, அம்மா, சித்தி என நான்கு பேரையும் கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளனர். சகோதரர் மோகன்ராஜ் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”


மது விற்பனையை ஊக்குவிக்கும் அரசு


மேலும் ”தெருவுக்குத் தெரு மதுக் கடைகளைத் திறந்து வைத்து, கட்டுப்பாடற்ற மது விற்பனையை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் திமுக அரசின் சாராய வியாபாரிகள் பணம் சம்பாதிக்க, இன்னும் எத்தனை பொதுமக்கள் உயிர் பலியாக வேண்டும்? தினம் ஒரு கொலை தமிழகத்தில் நடந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கையில், அதற்குப் பொறுப்பான காவல்துறையைக் கையில் வைத்துக்கொண்டு, நம்பர் ஒன் முதல்வர் என்று விளம்பரம் செய்ய வெட்கமாக இல்லையா முதலமைச்சர் ? குற்றவாளிகளை விரைவாகக் கண்டுபிடித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கைகள் கட்டப்பட்டு இருக்கும் காவல்துறையை ஆளுங்கட்சி பிடியிலிருந்து விடுவித்து அவர்கள் பணி செய்ய அனுமதித்து, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.


ஒருவர் கைது


பல்லடம் அரசு மருத்துவமனை முன்பு இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் ஏராளமான பா.ஜ.க-வினர் அவர்களது உடலை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.. கோவை மேற்கு மண்டல தலைவர் பவானீஸ்வரி தலைமையில் 5 எஸ்.பிக்கள்,10 டி.எஸ்.பிக்கள் உட்பட 700 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  4 பேர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்துவை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.