வேளாண் தொழிலில் தற்போது நிலவிவரும் விவசாய பணியாளர்களின் பற்றாக்குறையை போக்கி வேளாண் பணிகளை உரிய நேரத்தில் மேற்கொள்வதற்கு ஏதுவாக பண்ணை இயந்திரம் ஆக்குதல் திட்டம் தமிழக அரசால் அறிமுகம் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 7000 பவர் டில்லர் வழங்கும் நிகழ்வினை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து நெல்லை பாளையங்கோட்டை வ.உ. சி. மைதானத்தில் வேளாண் துறை சார்பில் நடந்த நிகழ்வில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவுக்கு கலந்து கொண்டு 77 விவசாயிகளுக்கு 64.30 லட்சம் மதிப்புள்ளான பவர் டில்லர்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து சபாநாயகர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஏழை எளிய விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்களை வழங்கி வருகிறார். விவசாய கடன் தள்ளுபடி, தற்போது வரை ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கியுள்ளார். இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் 7000 விவசாயிகளுக்கு பவர் டில்லர் வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 77 விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கொண்டு வர வேண்டும் என்றால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 368 பிரிவு 2- ன் படி இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவும், ராஜ்ய சபாவில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவும் இருந்து அதன்படி மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு கொண்டு செல்ல வேண்டும். இது தொடர்பாக ஏற்கனவே 2016- ம் ஆண்டு சுதர்சன நாச்சியப்பன் கமிட்டி இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு அரசியல் அமைப்புகள் அரசியல் தலைவர்களை சந்தித்து இது குறித்து விதிமுறைகளை தெளிவாக கூறியுள்ளது. 2018 இல் சட்ட ஆணையமும் அமைக்கப்பட்டு இது தொடர்பாக விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. இதனை கடந்த ஐந்து ஆண்டுகளில் அமல்படுத்தி விட்டு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நிலைக்கு வந்திருக்க வேண்டும்.
ஆனால் திடீரென ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமல்ல. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வராத நிலை, சபாநாயகர் உறுப்பினர்களை வெளியேற செய்தல், எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்யும் போது ஆகிய நிலையில் இதனை பயன்படுத்தி இது தொடர்பான சட்ட மசோதாவை அவர்கள் நிறைவேற்றலாம். ஆனால் ராஜ்ய சபாவில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாது, எனவே ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது கொண்டு வருவதற்கு சாத்தியம் இல்லை என்று நம்புகிறேன். மேலும் எதிர்கட்சிகள் மிக அமைதியாக இருந்து அவைகளில் கவனமாக இந்த பிரச்சனையை எதிர்கொள்வார்கள் என எண்ணுகிறேன் என தெரிவித்தார். எந்த திட்டங்களும், எந்த மசோதாக்களும் கொண்டு வரலாம். எந்த முடிவும் எடுக்கலாம். அது பாரத பிரதமரின் மன நிலையில் தான் இருக்கிறதே தவிர எனக்கு தெரிந்து நாடாளுமன்றத்தில் ஜனநாயக முறைப்படி மசோதாவை கொண்டு வரப்பட்டால் 100 சதவிதம் இது வெற்றி பெறாது. இது தேர்தல் சமயத்திற்கான ஸ்டண்ட் ஆகவும் இருக்கலாம், நிஜமாகவும் இருக்கலாம், ஆளுங்கட்சியும், அதை விட எதிர்க்கட்சியும் விழிப்போடு இருக்கின்றனர் என்றார்.
மேலும், செய்தியாளர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பேசியது குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அவர், தமிழக ஆளுநர் சனாதன கொள்கையால் நாடு வளர்ச்சி பெற்று உள்ளது என தெரிவித்தார். அவருக்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசி உள்ளார் என கூறினார்