இலங்கை கடற்கொள்ளையர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் மீது, அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் திடீரென தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில், வெள்ளப்பள்ளம் பகுதியை சேர்ந்த வைத்திய நாதசுவாமி, ராமராஜன், செல்வராஜ் ஆகியோர் காயமடைந்துள்ளனர். தாக்குதலை தொடர்ந்து மீனவர்கள் படகில் வைத்திருந்த ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, பேட்டரி செல்போன் மற்றும் 20 லிட்டர் டீசல் உள்ளிட்ட பொருட்களையும் இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.
2வது நாளாக தாக்குதல்:
நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான விசைப் படகில் 4 மீனவர்களும், சிவபாலன் என்பவருடைய பைபர் படகில் 4 மீனவர்களும், இரண்டு தினங்களுக்கு முன்பு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்நிலையில், நடுக்கடலில் அவர்கள் நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அதிவேக இன்ஜின் பொருத்தப்பட்ட படகுகளில் வந்த இலங்கையைச் சேர்ந்த 9 கடற்கொள்ளையர்கள் வீச்சருவாள், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் மீனவர்களின் படகுகளில் ஏறி மிரட்டினர். தொடர்ந்து மீனவர்களை தாக்கியதோடு, படகிலிருந்து செல்போன் ஜிபிஎஸ் கருவி, டார்ச்லைட் 700 கிலோ என மொத்தம் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறித்துச் சென்றனர். இந்த தாக்குதலில் படகில் இருந்த 8 பேரும் காயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களை தாக்கி, உடைமைகளை பறித்துச் சென்றுள்ளனர்.
தொடரும் தாக்குதல்:
நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், செருதூர், வெள்ளப்பள்ளம், வாணவன்மகாதேவி, விழுந்தமாவடி, வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்காடு உள்பட பல மீனவ கிராமங்கள் உள்ளன. அங்கிருந்து நாட்டுப்படகு மற்றும் விசைப்படகுகள் மூலம் ஆயிரக்கணக்கானோர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். அவ்வாறு, ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து செல்வது, விரட்டியடிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதேபோன்று, இலங்கை கடற்கொள்ளையர்களும் தமிழக மீனவர்களை தாக்கி பொருட்களை கொள்ளையடித்து செல்வதும் வாடிக்கையாக உள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்:
தமிழக மீனவர்கள் மீதான இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை நாட்டினரின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் மீனவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதோடு, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது. இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள், உடல் ரீதியாக பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதோடு, மீனவர்களிடமிருந்த பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, இத்தாக்குதல்களில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து, சட்டத்தின்முன் நிறுத்ததேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உரிய தூதரக வழிமுறைகளைப் பயன்படுத்தி இலங்கை அரசுடன் தொடர்புகொண்டு, மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.