செங்கல்பட்டு ( Chengalpattu News ) : செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த எடையூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் (வயது80). இவரது மனைவி தேவகி (வயது75). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ள நிலையில் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.  இந்நிலையில் தேவராஜ், தேவகி தம்பதியினர்  இருவரும்,  எடையூரில் தனியாக வசித்து வந்தனர். சிறு வயது முதல் விவசாயம் செய்து வரும் தேவராஜ் 80 வயதை கடந்தும் முள்ளங்கி மற்றும் தேங்காய், கீரை,முருங்கை ஆகியவைகளை தன் விவசாய நிலத்தில் சாகுபடி செய்து, அதனை சைக்கிளில் வைத்து ஊர், ஊராக சென்று,  வியாபாரம் செய்து வந்தார்.

 

சாவிலும் பிரியா தம்பதிகள்:

 

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்த மனைவி தேவகி திடீரென நேற்று,  இறந்து போனார். மனைவி இறந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத அவர் தனது  மனைவி உடலை பார்த்து, பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து 'உன்னை விட்ட எப்படி நாள் இனி வாழ்வேன்' என மனைவி உடலை பார்த்து தொடர்ந்து  தேம்பி, தேம்பி, அழுத வண்ணம் இருந்தார். அப்போது ஒரு கட்டத்தில் உறவினர்கள் அனைவரும் தேவகி உடலை சூழந்திருக்க தேவராஜ் திடீரென மனைவியின் உடல் மீது மயங்கி விழுந்து இறந்து போனார். 

 

இதனால் மிகுந்த மன வேதனைக்குள்ளான உறவினர்கள் சாவிலும் இணைபிரியாத முதிர்ந்த வயதுடைய தம்பதியர் இருவரின் உடலை பார்த்து அந்த கிராம மக்களே கதறிஅழுதனர். பிறகு இருவரது உடல்களையும் அக்கிராமத்தில் உள்ள இடுகாட்டில் ஒரே குழியில் அடக்கம் செய்தனர். இளம் வயது தம்பதியினர் போல் வாழ்ந்து, சாவிலும் இணைபிரியாத தேவராஜ்-தேவகியின் மரணம், எடையூர் கிராமத்தில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.