பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் இன்று (ஜனவரி 15ஆம் தேதி) அவனியாபுரத்திலும், 16ஆம் தேதி பாலமேட்டிலும், 17-ஆம் தேதி உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ள மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான பதிவு madurai.nic.in இணையதளம் மூலம் பதிவு கடந்த 10 ஆம் தேதி நண்பகல் 12.10மணிக்கு தொடங்கி 12ஆம் தேதி மாலை 5 மணி வரை பதிவு நடைபெற்று நிறைவுபெற்றது.


இந்த ஆன்லைன் முன்பதிவில் மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கு 9,699 காளைகளும், 5,399 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு ஆன்லைன் மூலமாக பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்ட பின் தகுதியான நபர்களுக்கு மட்டுமே போட்டிகளில் பங்கேற்பதற்கான அனுமதி டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும்.  டோக்கன் பதிவிறக்கம் செய்த மாடுபிடிவீரர்கள் மற்றும் காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது


இந்த நிலையில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர்கள் நலத்துறையின் முதன்மைச் செயலாளர் ஏ.கார்த்திக், உயர் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். அதில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதில், காளைகளுக்கு எந்தவொரு துன்புறுத்தலும் இல்லாமல் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை கண்டிப்புடன் பின்பற்ற உத்தரவிட வேண்டும். அதன் பின்னர் அனுமதி அளிக்க வேண்டும். மாவட்ட கலெக்டர்களிடம் இருந்து முன்அனுமதி பெறாத ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கக்கூடாது. கால்நடை வதைத் தடுப்பு விதிகளை பின்பற்றி போட்டிகளை நடத்துகிறவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும்.


மாவட்ட கலெக்டர்களிடம் இருந்து முன்அனுமதி பெறாத ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கக்கூடாது. கால்நடை வதைத் தடுப்பு விதிகளை பின்பற்றி போட்டிகளை நடத்துகிறவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும்.


மேலும் விதிகள் படி பார்வையாளர்கள் மாடம் அமைத்திருக்க வேண்டும், போட்டி ஒருங்கிணைப்பாளரிடம் விதிகளை பின்பற்றுவதற்கான உத்தரவாதத்தை உறுதி செய்ய வேண்டும், மாநில அளவிலான ஜல்லிக்கட்டு கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும், கொரோனா பரவல் கட்டுப்பாட்டு விதிகள் முறையாக பின்பற்றி இருக்க வேண்டும், காளை உள்ளிருந்து வெளியே செல்லும் வரையில் காட்சி பதிவு செய்திருக்க வேண்டும், போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை 300ஆக் இருக்க வேண்டும், மூன்று நாட்களுக்கு முன்னரே வீரர்களின் பெயர் பதிவு செய்திருக்க வேண்டும், கட்டாயம் மாடுகளுக்கான அவசர ஊர்தி நிறுத்தி வைத்திருக்க வேண்டும் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது.


உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 17-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அரசு வழிகாட்டுதல்படி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே முத்தாலம்மன் கோவில் முன்பாக முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று காலை நடைபெற்றது.


இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் உள்ள, புனித அடைக்கல மாதா அன்னை தேவாலயம் சார்பில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 8ஆம் தேதி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.