Polio Vacccine : தமிழ்நாட்டில் வரும் ஞாயிற்றுக்கிழமை( மார்ச் 3-ம் தேதி) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது.
நாட்டில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, ஆண்டுதோறும் குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. வரும் மார்ச் 3-ம் தேதி நடைபெற உள்ள போலியோ சொட்டு மருந்து முகாம் மூலம் 5 வயதுக்குட்பட்ட 57.83 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் போலியோவை (இளம் பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு தவணைகளாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் நடப்பாண்டிற்கான போலியோ சொட்டு மருந்து முகாம் மார்ச் 3 ஆம் தேதி நடைபெறும் என்று சுகாதாரத்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. இதற்காக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், “ சென்னை மாநகரில் 5 வயதிற்குட்பட்ட சுமார் 6 லட்சத்து 68 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக நிரந்திர மையங்கள் 1,445, பஸ் நிலையம் மற்றும் இதர மையங்கள் 155, நடமாடும் மையங்கள் 46 என 3 மொத்தம் ஆயிரத்து 646 மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் சுமார் 7 ஆயிரம் நபர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
அண்டை நாடுகளில் போலியோ தாக்கம் இருப்பதால் போலியோ நோய்கிருமி பரவும் அபாயம் உள்ளது. எனவே, 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். போலியோ சொட்டு மருந்து கொடுப்பதில் இருந்து விடுபடாமல் இருக்க அடையாள மை வைக்கப்படும். குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து முறையாக கொடுத்திருந்தாலும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமில் அவசியம் கொடுக்க வேண்டும். போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7 மணிக்கு தொடங்கி, இடை வெளியின்றி மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் போலியோவின் தாக்கம் இல்லாவிட்டாலும் பிறந்த குழந்தைகளுக்கு 9-வது மாதம் முதல் 12 மாதங்களுக்குள் போலியோ சொட்டு மருந்து வழங்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போலியோ சொட்டு மருந்து மையங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள். அங்கண்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக 3000-க்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் ஈடுபடுத்தப்படும்.
கவனிக்க வேண்டியவை..
- சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும்.
- 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் 03.03.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
- தடுப்பு மருந்து கொடுக்கும் முன் சோப்பு கொண்டு கை கழுவது / Sanitizer உபயோகப்படுத்துவது கட்டாயமாகும்.
- தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும்.
- அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்.
- விடுபடும் குழந்தைகளை கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும்.
- முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்களும், மருத்துவமனைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவமனைகளிலும் முகாம் நடைபெறும் நாளில் சொட்டு மருந்து வழங்கப்படும்.
- புலம்பெயர்ந்து வாழும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
- போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள். சோதனைச் சாவடிகள், விமான நிலையங்களில் பயண வழி மையங்கள் (Transit Booths) சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.