வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோக மையம் அமைந்துள்ளது. க்ரியா யோகா, ஞான யோகா, கர்ம யோகா மற்றும் பக்தி யோகா என யோகாவின் நான்கு பெரும் பாதைகளும் இங்கு வழங்கப்படுகிறது. உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு ஆண்டுதோறும் வந்து செல்கின்றனர்.


யோக மையத்தில் பல்வேறு விதமான தங்கும் வசதிகளும், 3 நாள், 4 நாள், 7 நாள் என வெவ்வேறு கால அவகாசம் தேவைப்படும் பல யோக வகுப்புகளும் உள்ளன.  மேலும், ஈஷா அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் சிறைக்கைதிகள் மற்றும் காவலர்களுக்கு சிறப்பு யோகா வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 


 


அந்த வகையில் இந்தாண்டு, ஈஷா அறக்கட்டளை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மத்திய சிறைகள், பெண்களுக்கான சிறப்பு சிறைகள் மற்றும் மாவட்ட சிறைகளில் சிறப்பு யோகா வகுப்புகள் இன்று தொடங்கி 10 நாட்கள் ஆன்லைன் வாயிலாக நடைபெற உள்ளன.




அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருச்சி, கோவை, சேலம், மதுரை, கடலூர், பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள மொத்தம் 18 சிறைகளில் இந்த வகுப்புகள் நடைபெற உள்ளன. சத்குருவால் பயிற்சி அளிக்கப்பட்ட யோகா ஆசிரியர்கள் இந்த வகுப்பை நடத்த உள்ளனர்.




கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் இந்த சூழலில் சிறை கைதிகள் மற்றும் காவலர்களுக்கு உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. 


இதில் சிம்ம க்ரியா, உப யோகா மற்றும் நமஸ்கார் யோகா உள்ளிட்ட எளிமையான யோகாக்கள், அதேசமயம், சக்தி வாய்ந்த பயற்சிகள் கற்றுக்கொடுக்கப்படும். குறிப்பாக, இந்த யோகா பயிற்சிகளை செய்வதன் மூலம் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியும், நுரையீரல் திறனும் அதிகரிக்கும். மனதளவில் சமநிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.




சிறை கைதிகளின் நலனுக்காக ஈஷா அறக்கட்டளை கடந்த 28 ஆண்டுகளாக இது போன்ற யோகா வகுப்புகளை இலவசமாக நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


கடந்த ஓராண்டாக கொரோனா தொற்று இந்தியாவை வாட்டி வதைக்கிறது. நடுவில் தொற்று பாதிப்பு குறைந்த வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. ஓராண்டாகவே முன்களப் பணியாளர்கள் தொற்று பரவாமல் இருக்க இரவு, பகல் பாராமல் உழைக்கின்றனர். காவலர்களும் ஊரடங்கின்போது, விடுப்பு எடுக்காமல் வேலை பார்த்தனர். தமிழ்நாட்டில் தேர்தல் பணியிலும் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டனர். தற்போது, அதிகரிக்கும் கொரோனா தொற்றால் புதிய கட்டுப்பாடுகள், இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காகவும் அவர்கள் மீண்டும் நேரம் காலம் பார்க்காமல் பணி செய்ய வேண்டிருக்கும். இதில் இருந்து எல்லாம் தங்களின் உடல்நலனை பாதுகாத்துக் கொள்ள அவர்களுக்கு இந்த யோகா பயனுள்ளதாக அமையும்.