Omni Buses: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாநகர பகுதிகளில் நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் ஆம்னி பேருந்துகளின் வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 


1.20 லட்சம் பயணிகள் முன்பதிவு


அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி நடப்பாண்டில் வரும் நவம்பர் 12 ஆம் தேதி  கொண்டாடப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை இந்த பண்டிகை வரும் நிலையில், அதற்கு மறுநாள் (நவம்பர் 13) ஆம் தேதி பொது விடுமுறையை தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதனால் வெளியூரில் இருந்து தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுக்க தொடங்கி உள்ளனர். இதற்கான பேருந்துகளில் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. தமிழ்நாடு அரசு சார்பில் கிட்டதட்ட 10,500க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் நவம்பர் 9 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது.  


இதற்காக சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், கே.கே.நகர், மாதவரம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு  சென்னையில் இருந்து  அரசு விரைவு பேருந்துகளில் 1.20 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.


ஆம்னி பேருந்துகள்:


அதேபோல, ஆம்னி பேருந்துகளிலும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் டிக்கெட் கட்டணத்தை ஐந்து சதவீதம் குறைத்துள்ளன.  இந்த நிலையில், ஆம்னி பேருந்துகள் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக இயக்கப்படாது  என்று  ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.  இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 9, 10, 11 தேதிகளில் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கோயம்பேடில் புறப்பட்டு நசரத்பேட்டை புறவழிச்சாலை வழியாக கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் சென்று  பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும். இந்த தேதிகளில் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் வரை காவல்துறையின் உத்தரவு படி ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது.


புகார் எண் அறிவிப்பு:


எனவே பயணிகள் கோயம்பேடு அல்லது கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் ஆகிய 2 இடங்களில் ஆம்னி பேருந்துகளில் ஏறிச் செல்லலாம். கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பாண்டிசசேரி வழியாக செல்லும் ஆம்னி பேருந்துகள் காவல்துறை அனுமதியுடன் வழக்கம் போல் இயக்கப்படும். ஆம்னி பேருந்துகளில் சங்கம் நிர்ணயித்த கட்டணத்திற்கு மிகாமல் கட்டணம் வசூலிக்கும்படி உரிமையாளர்களுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள் கட்டண விபரம் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. www.aoboa.co.in என்ற பயணிகள் ஆம்னி பேருந்து சம்மந்தமான புகார்களை 9043379664 என்ற சங்க தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 




மேலும் படிக்க


Special Vande Bharat Rail: நெருங்கும் தீபாவளி: சென்னை டூ நெல்லைக்கு நாளை ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்...என்ன டைம் தெரியுமா?