தீபாவளியையொட்டி ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக  குற்றம் சாட்டியும், அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பயனும் இல்லை என பொது மக்கள் கவலை அடைந்துள்ளனர். 


பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதற்கான கட்டண விவரத்தை ஆம்னி பேருந்து சங்கம் நிர்ணயித்துள்ளது. www.aoboa.co.in என்ற இணையதளத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு என பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம் எனவும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை காட்டிலும் கூடுதல் கட்டணத்தை ஆம்னி பேருந்துகள் வசூலிக்கும் பட்சத்தில் புகார் தெரிவிக்கலாம் எனவும் ஆம்னி பேருந்து சங்கம் தெரிவித்துள்ளது. 


இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அ.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா தொற்றுக்கு முன் தமிழகத்தில் நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கும் மற்றும் சுற்றுலாவிற்கும் மொத்தம் 4000 ஆம்னி பேருந்துகள் இயங்கிக் கொண்டிருந்தன.கொரோனா தொற்றுக்குப் பின் தற்பொழுது தமிழகத்தில் 1500 பேருந்துகள் மட்டுமே இயங்கிக் கொண்டுள்ளன.


ஆம்னி பேருந்துகளைப் பொறுத்தவரை  Non AC Seater, AC Seater , Non AC Sleeper, AC Sleeper , Premium Sleeper , Volvo/Scania Multiaxle Seater , Volvo/Scania Multiaxle Sleeper என ஏழு வகையான பேருந்துகள் உள்ளன. இவ்வாறு இயங்கும் பேருந்துகளில் முதலீடு மற்றும் இயக்குவதற்கு ஆகும் செலவுகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு வழித்தடத்திலும் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. சாதாரண பேருந்துகள் 40 லட்சத்திலிருந்து மல்டி வால்வோ போன்ற சொகுசுப் பேருந்துகள் ஒரு கோடியே 70 லட்சம் வரை உள்ளன. ஆகையால் ஒரு வழித்தடத்தில் அனைத்து விதமான பேருந்துகளுக்கும் ஒரே கட்டணம் நிர்ணயிக்க இயலாது. மேலும் ஆம்னி பேருந்துகளுக்கு மோட்டார் வாகன விதிகளின்படி கட்டணம் நிர்ணயிக்க வழிவகை இல்லை.


இன்று உலக அரங்கில் இந்தியா போன்று பல்வேறு நாடுகளில் போக்குவரத்துறையில் கட்டணம் நிர்ணயம் என்பது விமானம், ரயில், பேருந்து ஆகிய வகையான போக்குவரத்திற்கு டைனமிக் மென்பொருள் மூலமாக தேவைகள் குறைவாக உள்ள பொழுது குறைந்த அளவு கட்டணமும் தேவைகள் அதிகமாக உள்ள பொழுது அதிக அளவு கட்டணமும் மென்பொருள் மூலமாகவே நிர்ணயிக்கப்பட்டு பேருந்துகள் இயக்கத்தின் சராசரி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


இன்று இந்தியாவைப் பொறுத்தவரை விமானம், ரயில் மற்றும் ஆம்னி பேருந்துகள் உள்ளிட்ட சாலைப் போக்குவரத்திற்கும் இந்த முறையே கடைபிடிக்கப்படுகிறது.


இந்தியாவில் விமான போக்குவரத்தை பயன்படுத்த இயலாத பெருவாரியான பயணிகள் தங்கள் பயணத் திட்டத்திற்கு ஆம்னி பேருந்துகளையே நாடுகின்றனர் ஏனென்றால் ஆம்னி பேருந்துகளில் அவர்கள் விரும்பும் சொகுசு வசதிகள் உள்ளன. 


இருந்த போதிலும் அரசுக்கும் இந்தத் தொழிலுக்கு கெட்ட பெயர் ஏற்படக்கூடாது என்ற நோக்கில் சங்கங்கள் இணைந்து ஆம்னி பேருந்துகள் இயங்கும் அனைத்து வழித்தடங்களுக்கும் அதிகபட்ச கட்டணம் நிர்ணயித்துள்ளோம். இந்தக் கட்டண விவரம் www.aoboa.co.in என்ற வெப்சைட் முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்திற்கு அதிகமாக வசூலிக்கும் உரிமையாளர்களை போக்குவரத்து துறை அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று குறிப்பிட்டு இருந்தார். 


இதனிடையே வழக்கத்தை விட மிகவும் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினருடன், அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், உயர்த்தப்பட்ட கட்டணத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டு வெளியிடப்பட்டது. அந்த கட்டண பட்டியலே கூடுதலாக இருந்ததால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தென் மாவட்டங்களுக்கு, ரூ.700-ரூ.1,200 வரை வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம், 3 நாட்களில் மும்மடங்காக உயர்ந்து உள்ளது. இது பண்டிகை காலத்தில் ஊருக்குச் செல்ல விரும்புபவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசுமே இந்த கட்டண உயர்வுக்கு ஒத்துழைப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். 


புதிதாக உயர்த்தப்பட்ட கட்டண விவரங்கள் பின்வருமாறு:


சென்னை-கோவை: குறைத்தபட்சம் ரூ1,815 முதல் அதிகபட்சம் 3,025


சென்னை-மதுரை: குறைந்தபட்சம் ரூ1,776 முதல் அதிகபட்சம் 2,688


சென்னை-சேலம்: குறைந்தபட்சம் ரூ1,435 முதல் அதிகபட்சம் 2,109


சென்னை - பழனி குறைந்தபட்சம் ரூ1,650 முதல் அதிகபட்சம் 2,750 சென்னை - தென்காசி குறைந்த பட்சம் ரூ 2,079 முதல் அதிகபட்சம் 3,465


சென்னை - திருநெல்வேலி குறைந்த பட்சம் ரூ 2,063 முதல் அதிகபட்சம் 3,437 சென்னை - திருப்பூர் குறைந்த பட்சம் ரூ 1,667 முதல் அதிகபட்சம் 2,777


சென்னை - நாகப்பட்டினம் குறைந்த பட்சம் ரூ 1,271 முதல் அதிகபட்சம் 1,767


சென்னை - திருச்சி குறைந்த பட்சம் ரூ 1,394 முதல் அதிகபட்சம் 1,938


சென்னை - உடன்குடி குறைந்த பட்சம் ரூ 2,211 முதல் அதிகபட்சம் 3,630


சென்னை - திருச்செந்தூர் குறைந்த பட்சம் ரூ 2,112 முதல் அதிகபட்சம் 3,520


சென்னை -ஆறுமுகநேரி குறைந்த பட்சம் ரூ 2,079 முதல் அதிகபட்சம் 3,465 சென்னை-ஆத்தூர் குறைந்த பட்சம் ரூ.2063 முதல் அதிகபட்சம் 3,437


சென்னை -தூத்துக்குடி குறைந்த பட்சம் ரூ 2013 முதல் அதிகபட்சம் 3355 சென்னை -தென்காசி குறைந்த பட்சம் ரூ.2,079 முதல் அதிகபட்சம் 3,465 ரூபாயாகவும் உள்ளது.


முன்னதாக ஆம்னி பேருந்துகளின் கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக, பேருந்து உரிமையாளர்களுடன் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், துறைசார்ந்த பல்வேறு அதிகாரிகளும் கலந்துகொண்ட நிலையில், முன்னதாக விலை குறையும் எனப் பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தனர்.