காவிரியில் வெள்ளம் ! மக்கள் அச்சம் !


கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக, அங்குள்ள உள்ள அணைகள் நிரம்பி அங்கிருந்த வெள்ள நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்து, தற்போது அணையின் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.


 




 


இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து சுமார் 2 லட்சத்து 3 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. வெளியேற்றப்படும் வெள்ள நீர் கரூர் மாவட்டம், நொய்யல் வழியாக தவிட்டு பாளையம் காவிரி ஆற்றில் இருகறைகளையும் தொட்டு கடல் போல் காட்சியளிக்கிறது.


வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீரால் ! மக்கள் முகாம்களில் தஞ்சம் !


கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக தவிட்டுப்பாளையத்தில் ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் 50 குடும்பத்தினர் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். தெருக்களின் சிமெண்ட் சாலையில் சுமார் 2 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. வெள்ள நீர் நேர்முகமாக உள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து, பொதுமக்கள்  பாதிப்படைந்தது குறித்து தகவல் அறிந்த புகளூர் தாசில்தார் முருகன், மண்டல துணை தாசில்தார் அன்பழகன், கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களை சேர்ந்த 126 பேரை தவிட்டுப்பாளைத்தில் உள்ள ஈ.வே.ரா பெரியார் மண்டபம் மற்றும் தவிட்டுபாளையம் கிராம சேவை மையம் ஆகிய இடங்களில் 2 முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


 




 


பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு மருத்துவ பரிசோதனை


பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்கள் வீடுகளின் அருகில் கட்டியிருந்த ஆடு, மாடுகளை மேடான பகுதிகளுக்கு ஓட்டி சென்று பாதிக்கப்படாமல் கட்டி வைத்துள்ளனர். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 126 பேருக்கும் காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேலையும் வருவாய் துறை மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உரிய மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றுப் பகுதியில் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான, தீயணைப்பு வீரர்கள் காவிரி ஆற்று பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


 




 


பாதுகாப்பு பணி தீவிரம்


இந்நிலையில் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவனம் தலைமையில் அரவக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு  முத்தமிழ்செல்வன், வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார் தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்று பகுதிக்கும் சென்று அங்குள்ள பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டு பாதுகாப்பு பணியை பலப்படுத்துமாறு உத்தரவிட்டனர். அதேபோல் தீயணைப்பு வீரர்கள் கொண்டு வந்துள்ள அனைத்து மீட்பு கருவிகளையும் பார்வையிட்டனர். பின்னர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டு சென்றனர்.


இந்நிலையில் ஊருக்குள் புகுந்துள்ள வெள்ள நீரில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் வலை போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.