கள்ளக்குறிச்சி அருகே ஆம்னி பேருந்து - லாரி மோதிய விபத்தில் 2 பயணிகள் உயிரிழந்தனர். அதிகாலையில் நிகழ்ந்த இந்த விபத்து சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஸ் விபத்து
சென்னையில் இருந்து 35 மேற்பட்ட பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தது, அந்த பேருந்தை திருநெல்வேலியைச் சேர்ந்த தவமணி என்பவர் ஓட்டி சென்றுள்ளார் இந்த தனியார் ஆம்னி பேருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் தனியார் பால் பண்ணை அருகே சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் அஜாக்கிரதையால் முன்னாள் ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு மாடுகளை ஏற்றுக்கொண்டு சென்று கொண்டிருந்த லாரி மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
2 பேர் உயிரிழப்பு
இந்த விபத்தில் தனியார் ஆம்னி பேருந்தில் இடது புறத்தில் பயணம் செய்த ஒரு ஆண் ஒரு பெண் என இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதே போல விபத்தில் சிக்கிய லாரியில் கொண்டு செல்லப்பட்ட மாடுகளில் 4 மாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து உயிர் இழந்தவர்களின் சடலங்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
போலீஸ் விசாரணை :
மேலும் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் 2 மணி நேரத்திற்கு மேலாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உளுந்தூர்பேட்டை நகராட்சி வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. தொடர்ந்து லாரியில் மீதம் உள்ள மாடுகளை பத்திரமாக மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.