Nellai Attack: நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் 12ஆம் வகுப்பு மாணவனும், அவருடைய தங்கையும் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே அலற வைத்துள்ளது. இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


அரசியில் தலைவர்கள் கண்டனம்: 



  • செல்வப்பெருந்தகை: (காங்கிரஸ்)


"சாதிய மனப்பான்மை கொண்டவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க தமிழ்நாட்டு முதலமைச்சர் உறுதி பூண்டுள்ளார்கள். மேலும் சமுதாய மாற்றம் வராமல் இதுபோன்ற சமூகநீதிக்கு வேட்டு வைக்கின்ற நிகழ்வுகள் தொடர்நது நடந்து கொண்டுதான் இருக்கும். இதுபோன்ற சாதிய ரீதியிலான குற்றச்செயல்கள் தமிழ்நாட்டில் நடைபெறாமல் இருக்க, காவல்துறையின் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்  காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை.



  • திருமாவளவன்: (வி.சி.க. தலைவர்)


"சாதிவெறிபிடித்த அமைப்புகள் இத்தகைய நஞ்சை இளம்பிஞ்சுகளின் நெஞ்சில் விதைத்து வருவதுதான் இதற்கு முதன்மை காரணமாகும். சாதிப்பெருமை, மதப்பெருமை என்னும் பெயரில் தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக பரப்பப்படும் வெறுப்பு அரசியலே காரணம். சாதியவாதம், மதவாதம், இனவாதம் ஆகியவற்றின் ஊற்றுக்கண்ணாயிருக்கும் சங்பரிவார்கள் இத்தகைய சமூக முரண்களைக் கூர்மைப்படுத்துவதில் தீவிரமாக உள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சின்னதுரை குடும்பத்திற்குப் பாதுகாப்பளிக்க வேண்டும். வேறு பள்ளியில் சின்னதுரை கல்வித் தொடர அரசு ஆவன செய்ய வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும் இத்தாக்குதலின் பின்னணியில் உள்ளனரா என ஆய்வுசெய்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்”  என்று விசிக தலைவர் தெரிவித்துள்ளார். 



  • சீமான் (நாம் தமிழர்)


” ஒழுக்கத்தினாலும், உயர்ந்த குணத்தினாலும், கல்வித்திறனாலும் சிறந்த மாணவனாக விளங்கிய தம்பி சின்னத்துரையை சாதியத்தினைக் கொண்டு தாழ்த்த முற்படுவதும், ஒடுக்க நினைப்பதும், அதன் நீட்சியாக வன்முறையை ஏவிவிட்டதுமான கொடுங்கோல் போக்குகள் ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும். ஆகவே, கொலைவெறித்தாக்குதல் நடத்திய வன்முறையாளர்களைக் கடும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டுமெனவும், தம்பி சின்னத்துரைக்கும், அவரது தங்கைக்கும் உயரிய சிகிச்சை அளித்து, அவர்கள் மீண்டுவரவும், கல்வியினைப் பாதுகாப்பாகத் தொடரவும் வழிவாய்ப்புகளைச் செய்துதர வேண்டுமெனவும்” வலியுறுத்தியுள்ளார் நாம் தமிழகர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.



  • ஜான் பாண்டியன்: (தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்)


”இது திராவிட மண், திராவிட மாடல் என்று மேடைக்கு மேடை பேசும் திமுக அரசே! எங்கே சமூக நீதி! எங்கே சமத்துவம்!! தமிழகத்தில் தீண்டாமை, சட்டம் - ஒழுங்கு, போன்றவைகள் இன்னும் ஒழிக்கப்படவில்லை, மேலும் நாங்குநேரியில் அரங்கேறிய சம்பவம் போன்று வேறு எங்கும் ஏற்படாமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன்.