Hosur Airport: ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்காக பரிந்துரைக்கப்பட்ட இரண்டு இடங்களில் ஒன்றை இனி தமிழ்நாடு அரசு தான் தேர்வு செய்ய வேண்டியுள்ளதாம்.
ஓசூர் விமான நிலையம்:
அண்டை மாநிலங்களுடன் வணிகம் மற்றும் போக்குவரத்தை மேம்படுத்தும் விதமாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதேநேரம், இதற்காக தேர்வு செய்யப்பட்ட இரண்டு பகுதிகளும் பாதுகாபு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அங்குள்ள வான்வெளி பகுதியை ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு அரசு ஒரு குழு அமைத்தது. மேற்பரப்புகளில் உள்ள பிரச்னைகளை (Obstacle Limitation Surface) ஆய்வு செய்வதற்கான அந்த குழு, குறிப்பிட்ட இரண்டு பகுதிகளிலும் தனது ஆய்வை முடித்துள்ளதாகவும், அரசு தேர்வு செய்த இரண்டு இடங்களிலும் தாராளமான விமான நிலையம் அமைக்கலாம் என்று அறிக்கை சமர்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆய்வு நடந்த இடங்கள் எவை?
பெலகொண்டப்பள்ளியில் அமைந்துள்ள தனேஜா ஏரோஸ்பேஸ் அண்ட் ஏவியேஷன் லிமிடெட்டிகு சொந்தமான தனியார் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் ஓசூருக்கு அருகிலுள்ள சூலகிருக்கு வடக்கே உள்ள ஒரு இடம் ஆகிய இரண்டு பகுதிகளை தான் புதிய விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு பரிந்துரைத்துள்ளது. அந்த இடங்களில் திட்டத்தை மேற்கொண்டால் எதிர்கொள்ள வேண்டிய சாதக பாதகங்களை தான் தமிழ்நாடு அரசு அமைத்த குழு முழுமையாக ஆராய்ந்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதனடிப்படையில் தமிழ்நாடு அரசின் உயர்மட்ட அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் எதிர்வரும் வாரங்களில் நடந்து, இறுதி முடிவினை அடுத்த ஒரு மாதத்திற்குள் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?
முன்மொழியப்பட்ட ஓடுபாதைக்கான குறிப்பு புள்ளியிலிருந்து 20 கி.மீ வரையிலான சுற்றளவை உள்ளடக்கி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதில் தடைகளுக்கான வாய்ப்புகள் குறித்து நவீன உபகரணங்களை கொண்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட இரண்டு தளங்களும் பாதுகாப்பு கட்டுப்பாட்டில் உள்ள உணர்திறன் வாய்ந்த வான்வெளிக்கு அருகில் உள்ளன. காரணம் இந்திய ராணுவத்திற்கான பல தளவாடங்களை உற்பத்தி செய்யும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் பெங்களூர்வை அடிப்படையாக கொண்டே செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஆய்வு தொடர்பாக வெளியான தகவல்களின்படி, விமான நிலையம் அமைக்க பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் சில நிறை, குறைகள் இருந்தாலும், திட்டத்தை செயல்படுத்த இரண்டுமே ஏதுவானதாக உள்ளன. பட்டியலிடப்பட்ட இரண்டு இடங்களும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) அமைக்கப்பட்டு வரும், பெங்களூரு சேட்டிலைட் டவுன் ரிங் ரோட்டின் (STRR) முன்மொழியப்பட்ட பகுதிக்கு அருகில் அமைந்துள்ளன. இந்த சாலை ஓசூர் உள்ளிட்ட பல நகரங்களை பெங்களூருவில் இருந்து அணுகுவதை எளிதாக்குகிறது.
நிலம் கையகப்படுத்த அரசு தயார்:
ஏற்கனவே குறிப்பிட்ட இரண்டு பகுதிகளுமே புதிய விமான நிலையத்திற்கு ஏற்றது என, இந்திய விமான நிலைய நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதைதொடர்ந்து, வணிக விமானங்களின் பயன்பாட்டிற்காக ஓசூர் வான்பகுதியில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தும்படி, கடந்த மே 7ம் தேதி பாதுகாப்பு அமைச்சகத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் கடிதமும் எழுதப்பட்டுள்ளது. எனவே, பரிந்துரைக்கப்பட்ட இரண்டு இடங்களில் ஒன்றை, தமிழ்நாடு அரசு உறுதி செய்ததும் மாவட்ட நிர்வாகம் நிலம் கையகப்படுத்தும் பணிகளை தொடங்க உள்ளது.
தொழில்துறையினரின் விருப்பம் என்ன?
ஓசூரில் அமைய உள்ள விமான நிலையத்தை பெலகொண்டப்பள்ளியில் அமைக்க வேண்டும் என்பதே தொழில்துறையினரின் கோரிக்கையாக உள்ளது. காரணம் அந்த பகுதி சமவெளியில் அமைந்திருப்பதோடு, தமிழ்நாட்டில் நகரங்களை பெங்களூருவுடன் இணைக்கும் பல சாலைகளுக்கு அருகாமையிலும் உள்ளது. அதேநேரம், விமான நிலைய இயக்குநருக்கும் மத்திய அரசுக்கும் இடையே கையெழுத்தான சலுகை ஒப்பந்தத்தின் காரணமாக, 2033 வரை 150 கி.மீ.க்குள் அத்தகைய வசதியைத் தடைசெய்யும் பெங்களூரு சர்வதேச விமான நிலைய லிமிடெட் (BIAL)-இடமிருந்து தமிழ்நாடு ஆட்சேபனையின்மைச் சான்றிதழ் (NOC) பெற வேண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓசூர் கிரீன்ஃபீல்ட் விமான நிலையம்:
ட்ரில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருளாதாரத்தை அடையும் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆண்டுக்கு 3 கோடி பயணிகளை சமாளிக்கும் வகையில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஓசூரில் விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. ஒசூர் தொழில்துறை மட்டுமின்றி சுற்றியுள்ள மாவட்டங்களின் வளர்ச்சியை மேம்படுத்தவும், தொழில் நகரமான பெங்களூரு உடனான இணைப்பை மேம்படுத்துவதும் இந்த திட்டத்தின் இலக்காக உள்ளது. இங்கிருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற நாட்டின் மிக முக்கியமான வணிக நகரங்களுக்கு விமானங்களை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், பெங்களூரு விமான நிலையத்தை சுற்றிய 150 கிலோ மீட்டர் பரப்பளவில், 2033ம் ஆண்டு வரை வேறு எந்தவொரு விமான நிலையமும் அமையக் கூடாது என்ற மத்திய அரசின் ஒப்பந்தம் நிலவுகிறது. இதன் காரணமாக ஓசூர் விமான நிலையம் 2033ம் ஆண்டு வரை பயன்பாட்டிற்கு வர வாய்ப்பில்லை என்பது சிக்கலாக உள்ளது.