தான் வளர்த்த அக்காவின் மகள்கள் தன்னைக்காப்பாற்றுவார்கள் என சொத்துக்களை எழுதிக்கொடுத்த மூதாட்டி ஒருவர், தற்போது கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில் யாரும் இதுவரை கண்டுக்கொள்ளவில்லை என உதவிக்கேட்டு கண்ணீருடன் முதல்வர் மு.க ஸ்டாலினிக்கு வீடியோ ஒன்றினை அனுப்பியுள்ளார்.
சமூகத்தில் சந்தோஷமாக வாழ்வதற்கு உறவுகளை விட சொத்துக்கள் தான் முக்கியம் என்ற நிலைக்கு நாம் மாறிவிட்டோம். எத்தனை தான் உறவுகளோடு பிண்ணிப்பிணைத்தாலும் சொத்துப்பிரச்சனை என்று வரும் பொழுது அதில் நிச்சயம் பிளவுகள்தான் ஏற்படும். அப்படி தான் ஆசையாய் வளர்ப்பு மகள்களுக்கு எழுதிக்கொடுத்தச் சொத்தினை திரும்பிப் பெற்றுத்தருமாறு முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கண்ணீர் மல்க காணொலி காட்சி மூலம் வீடியோ ஒன்றினை அனுப்பியுள்ளார் திருப்பூர் மாவட்டத்தினைச்சேர்ந்த மூதாட்டி ஒருவர்.
இவர், திருப்பூர் மாவட்டம் சடையகவுண்டனூர் கிராமத்தைச்சேர்ந்த சுப்பத்தாள் ஆவார். இவருக்கு திருமணம் ஆகாத நிலையில், தன்னுடைய எதிர்காலத்தினைக்கருத்தில் கொண்டு அவருடைய அக்காவின் மகள்களை வளர்ப்பு மகள்களாக ஆசையோடு வளர்த்து வந்துள்ளார். இவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ததோடு நல்ல முறையில் அவர்களைக் கவனித்தும் வந்துள்ளார் சுப்பத்தாள். இந்நிலையில் தான் தனக்கு வயதாகிறது என்று கருதிய அவர், தன்னிடம் இருந்த சொத்துக்களை எல்லாம் சரிபாதியாக பிரித்து தன்னுடைய வளர்ப்பு மகள்களுக்கு கொடுத்துள்ளார். அவர்கள் தன்னை வயதான காலத்தில் கவனித்துக்கொள்வார்கள் என்று நினைப்பில் இருந்தபோது தான் அதற்கு தலைகீழாக நடந்துக்கொண்டுள்ளனர் சுப்பத்தாளின் வளர்ப்பு மகள்கள்.
கொரோனா பெருந்தொற்று மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கிவரும் நிலையில் தான் சுப்பத்தாளும் இந்த கொரோனா வைரஸினால் 55 சதவீதம் நுரையீரல் தொற்றினால் பாதிக்கப்பட்டு உடுமலைப்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். ஆனால் இதுவரை அவருடைய வளர்ப்பு மகள்கள், தனக்கு என்ன ஆயிற்று என்று கூட பார்க்கவரவில்லை என்ற வேதனையில் மருத்துவமனையில் இருந்து வருகிறார். இந்த மனநிலையில் இருக்கும்போது தான் முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கண்ணீர் மல்க காணொலி காட்சி மூலம் வீடியோ ஒன்றினை அனுப்பியுள்ளார் சுப்பத்தாள். அந்த வீடியோவில், “என்னை கவனித்துக்கொள்வார்கள் என்று தான், நான் சொத்தினை என்னுடைய அக்கா மகள்களுக்கு மாற்றிக்கொடுத்தேன். ஆனால் யாரும் இதுவரை எனக்கு என்ன நடந்தது? எப்படி இருக்கிறேன் என்று கூட பார்க்க வரவில்லை எனவும், எனவே நான் எழுதிக்கொடுத்த என் கிரையத்தினை மீண்டும் என் பெயருக்கு மாற்றித்தர வேண்டும்“ என்று தெரிவித்திருந்தார். மேலும் வளர்ப்பு மகள்கள் சொத்துக்களை வாங்கி ஏமாற்றி விட்டநிலையில், மகனாய் என்னைக் காப்பாற்றுங்கள் என முதல்வருக்கு மூதாட்டி கண்ணீர் மல்க அனுப்பிய இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
தற்போது மு.க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற நாள் முதல் மக்களின் நலன்களுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையில், திருப்பூர் மாவட்டம் சடையகவுண்டனூர் கிராமத்தைச்சேர்ந்த சுப்பத்தாளின் கோரிக்கையினை நிறைவேற்றுவார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகளவில் ஏற்பட்டுள்ளது.