ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படுவது குறித்து, உரிய நேரத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படுமா என்று சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கேள்வி எழுப்பினார்.
அரசு ஊழியர்கள் நலனில் முதலமைச்சர் அக்கறை
இதற்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார். அவர் கூறும்போது, "அரசு ஊழியர்கள் நலனில் முதலமைச்சர் அக்கறையோடு உள்ளார். அரசு ஊழியர்களின் நலன் தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளை நிதிநிலை அறிக்கையில் வெளியிட்டு உள்ளோம்.
பழைய ஓய்வூதியம் தொடர்பாக ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சரிடம் பேசி உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
திமுக தேர்தல் வாக்குறுதி
ஏற்கெனவே 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதியில் திமுக வெற்றி பெற்றால் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தது. இதைக் குறிப்பிட்டு ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.