ஓலா கால் டாக்சி நிறுவனங்களின் ஓட்டுனர்கள், செயலிகளில் காட்டுவதை விட கூடுதல் பணம் பெற்றால் வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


தனியார் போக்குவரத்து சேவை:


கால்களில் சுடுதண்ணீரை ஊற்றிக் கொண்டது போல நொடி நேரம் கூட நிற்காமல், அறக்க பறக்க ஓடிக்கொண்டுள்ளது மனித குலம். இந்த சூழலில் அரசுப் பேருந்து சேவைகளை எதிர்பார்த்து காத்திருக்கும் அளவிற்கு யாருக்கும் இங்கு பொறுமை இல்லை. இதற்கு மாற்றாக தான் ஆரம்ப காலங்களில் ஆட்டோ, கால் டாக்சி ஆகிய சேவைகள் தனித மனிதர்களால் தொடங்கப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.


செயலிகள் மூலம் போக்குவரத்து சேவை:


ஆட்டோ மற்றும் கார் மூலமான இந்த போக்குவரத்து சேவைகள் ஆனது, காலப்போக்கில் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு வளர்ச்சியடைந்து தற்போது செயலி சேவைகளாக மாற்றம் கண்டுள்ளது. ஓலா, ஊபர் உள்ளிட்ட பல்வேறு செயலிகள் மூலம் இந்த சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தனிநபர் சேவைகளை காட்டிலும் குறைந்த கட்டணத்திற்கே சேவைகள் வழங்கப்படும் என விளம்பரப்படுத்தப்படுகின்றன. டாக்ஸி, ஆட்டோவிற்காக கால் கடுக்க காத்திருக்க  வேண்டாம், செயலியில் புக் செய்தால் வீட்டு வாசலிலேயே பிக்-அப் செய்துவிடுவோம் என வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அறிமுகமான இந்த சேவைகள் தற்போது நகர்ப்புறங்களில் பிரமாண்ட வளர்ச்சி கண்டுள்ளன.


ஓட்டுனர்களின் மோசடி:


இந்நிலையில் தான் ஓலா செயலி மூலம் ஆட்டோ, கார் புக் செய்யும்போது வாகனங்களின் ஓட்டுனர்கள்,  செயலியில் கட்டணம் எவ்வலவு  காட்டுகிறது என்று முதலில் வாடிக்கையாளரிடம் கேட்கிறார்கள். அதன் பிறகு, செயலில் இருப்பதை காட்டிலும் கூடுதல் தொகையை தந்தால்தான் சவாரி வரமுடியும் என்கிறார்கள். மறுத்தால், அந்த புக்கிங்கை வாடிக்கையாளர்களையே கேன்சல் செய்யும்படி கூறிவிடுகின்றனர். இதனால் வாடிக்கையாளர்கள் தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாவதோடு, அநாவசியமாக கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டியுள்ளது.


ஓலா சிண்டிகேட்:


ஒரு சிலர் என்று இல்லாமல் பெரும்பாலான ஓட்டுனர்கள் கூடுதல் கட்டணமே கேட்பதன் மூலம், அவர்கள் சிண்டிகேட் அமைத்து செயல்படுவது உறுதியாகிறது. நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் பணம் பெறுவது சட்டப்படி குற்றமாகும். இந்நிலையில், வாடிக்கையாளர் கூடுதல் கட்டணம் செலுத்தி இருந்தால், அதனை திரும்பப் பெற முடியும் என ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது.


பணத்தை திரும்பப் பெறுவது எப்படி?



  • ஓலா ஆட்டோ மற்றும் காரில் சென்று கூடுதல் கட்டணம் கொடுத்து பயணம் செய்தவராக இருந்தால்,  Ola App ஐ Open செய்து இடது பக்க மேல் பக்கம் இருக்கும் மூன்று கோடுகளை டச் செய்தால் அதில் Your Ride என்ற ஆப்ஷன் வரும்.

  • அதில் கடைசியாக பயணம் செய்ததை டச் செய்தால் கடைசியாக மேற்கொண்ட பயணத்திற்கான கட்டண விவரங்கள் வரும்

  • அதற்கு அடியில் வலது ஓரத்தில் Support என்பதை டச் செய்து Driver issue டச் செய்து. Driver demanded extra cash என்பதை டச் செய்து நீங்கள் கொடுத்த மொத்த தொகையை பதிவிட்ட பின் கூடுதல் தொகை எவ்வளவு என்பது அதுவே காட்டி விடும்.

  •  பின்பு நமது வங்கி அக்கவுண்ட் எண் IFSC Code Branch name Branch location பதிவிட்டு Submit கொடுத்த பின் நமது Mail க்கு Ticket no வழங்கப்படும். 

  • அதன் பின்னர் பத்து நாட்களுக்குள் வங்கி கணக்கில் கூடுதல் கட்டணம் பெறப்பட்ட தொகை வரவு வைக்கப்படும் என Mail வரும்.

  • Ola கூடுதல் கட்டணம் செலுத்தி பயணிக்கும் பயணிகள் இந்த வழிமுறை கையாள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.