கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் அரசு தரப்பில் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி ஓராண்டு காலம் நூற்றாண்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ஜூன் மாதம் முதல் மக்களுக்கு பயன்பெரும் வகையில் பல்வேறு திட்டங்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னை கிண்டியில் அரசு பன்னோக்கு மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டது. அதேபோல கலைஞர் கருணாநிதியின் சொந்த ஊர் திருவாரூரில் தேர் வடிவில் கலைஞர் கோட்டம் திறக்கப்பட்டது.


கலைஞர் நூற்றாண்டு நூலகம்: 


இதனை தொடர்ந்து இன்று ஜூலை 15 ஆம் தேதி காமராஜர் பிறந்தநாளையொட்டி மதுரையில் பிரம்மாண்டமான கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறந்து வைக்கப்படுகிறது. இது தொடர்பான முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கையில், “எதிர்காலத் தலைமுறைக்கும் வழிகாட்டும் முத்தமிழறிஞர் கலைஞரின் புகழ் போற்றும் வகையில், ஜூலை 15-ஆம் நாள், தமிழ் நகராம் மாமதுரையில் உலகத் தரத்திலான கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை உங்களில் ஒருவனான நான் திறந்து வைக்க இருக்கிறேன். நூலகங்கள் என்பவை புத்தகங்களால் நிறைந்தவை.


2 இலட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் அடித்தளம், தரைத்தளம், அதனுடன் 6 தளங்களைக் கொண்டு 120 கோடியே 75 இலட்ச ரூபாய் செலவில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. அடித்தளத்தில் வாகன நிறுத்துமிடம், செய்தி-நாளிதழ் சேமிப்பு, நூல் கட்டும் பிரிவு அமைந்துள்ளன. தரைத்தளத்தில் கலைக்கூடம், மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவு, மாநாட்டு கூடம், ஓய்வறை, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, பல்வகை பயன்பாட்டு அரங்கம், உறுப்பினர் சேர்க்கை பிரிவு உள்ளிட்டவை அமைந்துள்ளன. முதல் தளத்தில் கலைஞர் பகுதி, குழந்தைகள் நூலகம், நாளிதழ்கள் - பருவ இதழ்கள் படிக்கும் பகுதி, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, அறிவியல் கருவிகள் பிரிவு உள்ளிட்டவை அமைந்துள்ளன. இரண்டாம் தளத்தில் தமிழ் நூல்கள் பிரிவு, கலைஞரின் நூல்களைக் கொண்ட பிரிவு எனச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. மூன்றாவது தளத்தில் ஆங்கில நூல்கள், ஆராய்ச்சி இதழ்கள் உள்ளன. நான்காவது தளத்தில், எதிர்காலக் கனவுகளுடன் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணாக்கர் மற்றும் இளைஞர்களின் கனவு நனவாகும் வகையில் ஏறத்தாழ 30 ஆயிரம் புத்தகங்களுடனான பகுதி அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது தளத்தில் மின்னணுத் தொழில்நுட்பத்தின் வாயிலாக இன்றைய தலைமுறைக்குத் தேவையான அறிவுச் செல்வங்கள் அனைத்தையும் தருவதற்கான பகுதி உலகத் தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆறாவது தளத்தில் நூல் பகுப்பாய்வு, நூல் பட்டியல் தயாரித்தல் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் சார்ந்த பகுதிகள் இடம்பெற்றுள்ளன. உள்கட்டமைப்புகள் கண்களை விரியச் செய்யும் வகையில் வியக்க வைக்கின்றன’ என குறிப்பிட்டுள்ளார்.


 6 தளங்கள் கொண்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை, இன்று மாலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் மத்தியில் படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் இந்த நூலகம் கட்டப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு நூலகம் மூலம் பல மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்றும் மதுரை மட்டுமல்லாமல் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் மாணவர்களுக்கும் இது மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.