ஒடிஷா ரயில் விபத்தில் தமிழர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்றும், தொடர்பு கொள்ள முடியாமல் இருந்த 5 நபர்களும் நலமுடன் இருப்பதாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ஒடிஷாவில் பாலசோர் அருகே நேற்று முன்தினம் (ஜூன்.02) இரவு நடந்த கோர விபத்தில் சிக்கி 275 நபர்கள் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் காயமடைந்த நிலையில், இந்திய ரயில்வே வரலாற்றில் மிக மோசமான விபத்தாக இந்த விபத்து பார்க்கப்படுகிறது.
இச்சூழலில் தமிழ்நாட்டை சேர்ந்த பலர் இந்த விபத்தில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீட்புப்பணிகளை துரிதப்படுத்த தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ் .எஸ். சிவசங்கர், உயர் அலுவலர்கள் கொண்ட தமிழ்நாடு குழு ஒடிஷா சென்றது. இவர்கள் முன்னதாக ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில், இன்று பிற்பகல் தமிழ்நாடு திரும்பினர்.
தமிழ்நாடு அரசு அறிவிப்பு
இந்நிலையில், இன்று அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் இருவரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஒடிஷா, பாலசோரில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள், மீட்புப் பணிகள், சிகிச்சை நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விவரங்களைத் தெரிவித்தனர்.
முன்னதாக, கோரமண்டல் ரயிலில் தமிழ்நாட்டுக்கு முன்பதிவு பெட்டியில் வந்து கொண்டிருந்த மீனா, ரகுநாதன், அருண், கல்பனா, கமல், கார்த்திக் ஆகிய பயணிகளை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும், ஆனால் இவர்களைப் பற்றி தகவல் கேட்டு உறவினர்கள் யாரும் இதுவரை தங்களை தொடர்புகொள்ளவில்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், D3, D4, D7, D9,S1, S2 ஆகிய கோச்களில் பயணித்தவர்களுக்கு பாதிப்பு கிடையாது என்றும், இது உடன் பயணித்த பயணிகள் கொடுத்திருக்கும் செய்தி என்றும் ஒடிஷா சென்று திரும்பிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் சற்று முன் தெரிவித்தார்.
மேலும் சிறிது நேரத்தில் நல்ல தகவல் வரும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதேபோல் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் உயிரிழந்ததாக இதுவரை தகவல் இல்லை எனத் தெரிவித்திருந்தார்.
சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை
முன்னதாக, ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளது.
விபத்து நிகழ்ந்தது முதலே விபத்து தொடர்பாக பல யூகங்கள் வலம் வந்த நிலையில், விபத்து தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், தற்போது ஒடிஷா ரயில் விபத்து சிபிஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளது.