ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 


இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளதோடு, இரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும், தேவைப்படும் பட்சத்தில் தமிழ்நாட்டின் மருத்துவக் குழு மற்றும் இதர உதவிகளை அனுப்பி வைப்பதாகவும் ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துக் கொண்டார்.


மேலும் மீட்பு பணிகளில் உடனிருந்து தமிழ்நாட்டினருக்குத் தேவையான உதவிகளைச் செய்திட போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  குமார் ஜயந்த் , ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் திருமதி பட்நாயக் ஆகியோர் கொண்ட குழு விபத்து நடைபெற்ற ஒடிசா மாநிலத்திற்கு விரைந்து செல்ல  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனுப்பி வைத்துள்ளார்.


இந்நிலையில் ஒடிசா இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று (3.6.2023) ஒரு நாள் மட்டும் துக்கம் அனுசரிக்கப்படும், மேலும், அரசின் சார்பில் இன்று நடைபெறவிருந்த நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்” என கூறப்பட்டுள்ளது. அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டது


முன்னதாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா இன்று தொடங்குவதாக இருந்தது. ஆனால் ரயில் விபத்தில் 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இத்தகைய சோகமான சூழ்நிலையில் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்களை நடத்துவது சரியல்ல என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. வடசென்னையில் நடைபெறுவதாக இருந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்கப் பொதுக்கூட்டம் வேறொரு நாளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.