ஒடிசாவில் நடைபெற்ற கோர ரயில் விபத்தில் மீட்கப்பட்ட 137 பேர் சென்னை வந்தடைந்தனர். இவர்களை சென்னை மத்திய ரயில் நிலையத்தில் வரவேற்ற தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், காயம் பட்டோருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். சென்னை வந்தடைந்த 137 பேரில் 7 பேர் காயங்களுடன் வந்தடைந்துள்ளனர். 




நாடே கடந்த இரண்டு நாட்களாக பேசிக்கொண்டு இருப்பது ஒடிசாவில் முன்று ரயில்கள் மோதி ஏற்பட்ட கோர விபத்தைப் பற்றியது தான். கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது என்ற தகவல் வெளியானதும், தமிழ்நாட்டை மேலும் பாதிப்புக்குள்ளாக்கியது இந்த செய்தி. மீட்புப்பணிகளை மேற்கொண்டு வந்த ஒடிசா முதலமைச்சரை தொலைபேசியில் அழைத்து தமிழ்நாடு அரசு சார்பாக அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என்றார் முதலமைச்சர் ஸ்டாலின். மேலும், தமிழ்நாட்டில் இருந்து ஒடிசாவுக்கு அமைச்சர்கள் சிவசங்கர் மற்றும் உதயநிதி ஆகியோர் அடங்கிய குழு ஒடிசா விரைந்தது. 


ஜூன் 2ஆம் தேதி மாலை இந்த விபத்து ஏற்பட்டதால், இரவு நேரத்தில் மீட்புப்பணிகளை விரைவாக மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. கோரமண்டல் எக்ஸ்ப்ரஸ், யஷ்வந்த் பூர் ஹவுரா ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மொத்தம் மூன்று ரயில்கள் மோதி ஏற்பட்ட விபத்தின் புகைப்படங்களைப் பார்க்கும் போது நமக்கே சற்று பகீர் எனத்தான் இப்போது வரை இருக்கிறது. 


சம்பவ இடத்துக்கு ஒடிசா முதலமைச்சர், மத்திய ரயில்வே துறை அமைச்சர் மற்றும் மேற்கு வங்க முதலமைச்சர் என பலர் உடனடியாக விரைந்து மீட்புப்பணிகளை பார்வையிட்டனர். நேற்று மாலை சம்பவ இடத்துக்கு வந்த பிரதமர் மோடி, காயமடைந்தவர்களை சந்தித்தப் பின்னர், இந்த விபத்துக்கு காரணமானவர்கள் யார் என்று கண்டுபிடித்து அவர்களை அரசு கடுமையாக தண்டிக்கும் என கூறினார். 






ரயில்வே துறை சார்பில் இதுவரை அளிக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின் அடிப்படையில், மொத்தம் 17 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதுவரை 288 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். 747 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 56 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என தெரிவித்துள்ளது. இந்த விபரங்களின் அடிப்படையில் அதிர்ஷ்ட்டவசமாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்பது சற்று ஆறுதல் அளிக்கும் தகவலாக உள்ளது.  


தற்போது சென்னை திரும்பியுள்ளவர்களில் 7 பேர் காயத்துடன் உள்ளதாகவும் அதில் 2 பேருக்கு மட்டும் எக்ஸ்-ரே எடுத்த பின்னர் தான் மேற்கொண்டு சிகிச்சை வழங்கப்படவுள்ளது என்றும் மிகவும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படவேண்டிய நிலையில் யாரும் இல்லை எனவும் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.