இந்தியாவின் தென் மாநிலங்களில் உள்ள பெண்களின் உடல் பருமன் குறித்த புதிய ஆய்வறிக்கை ஐதராபாத்தில் உள்ள சமூக மேம்பாட்டு கவுன்சில் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உடல் பருமன் மிக்க பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடல் பருமன் மிக்க பெண்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 9.5 சதவிகிதம் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. கர்நாடகாவில் 6.9 சதவிகிதமும் கேரளாவில் 5.7 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. பெண்களிடையே உடல் பருமன் அளவு அதிகரிப்பு தெலுங்கானாவில் குறைவாக உள்ளது. அங்கு, 2 சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளது.


ஆய்வுக்கான தரவு தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (NFHS)-4 மற்றும் 5 (2019-2021) ஆகியவற்றிலிருந்து ஒப்பிடப்பட்டுள்ளது. தேசிய அளவில் பெண்களில் நான்கில் ஒரு பங்கு அதாவது 24% பேர் உடல் பருமனாக இருக்கின்றனர். ஆண்களின் சதவிகிதம் 22.9ஆக உள்ளது. இது பெண்களை விட சற்ற குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலும் இதேபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் 15-49 வயதுடைய பெண்களின் உடல் பருமன் குறித்து தெலங்கானாவில் 31 மாவட்டங்கள், கர்நாடகாவில் 30 மாவட்டங்கள், ஆந்திராவில் 13, கேரளாவில் 14 மற்றும் தமிழ்நாட்டில் 32 மாவட்டங்கள் உள்பட 120 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தையை பெற்றெடுத்து இரண்டு மாதங்களே ஆன பெண்களிடையே ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை.


உலக சுகாதார அமைப்பின் (WHO)படி, பெரியவர்களின் உடல் நிறை குறியீட்டெண் (BMI) 25ஐ விட அதிகமாகவோ அல்லது அதற்கு சமமாகவோ இருந்தால், அவர்கள் அதிக எடை கொண்டவர்களாக கருதப்படுகிறார்கள். அதேபோல, உடல் நிறை குறியீட்டெண் 30 ஐ விட அதிகமாகவோ அல்லது சமமாகவோ இருந்தால் அது உடல் பருமனமாக கருதப்படும்.


கிராமப்புற பெண்களை விட நகர்ப்புற பெண்களுக்கு உடல் பருமன் அதிகமாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. தேசிய அளவில், பெண்களின் உடல் பருமன் அதிகமாக இருப்பது கிறிஸ்தவர்களிடையே அதிகம் (31.2%) இருப்பதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால், தென் மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் தெலங்கானாவில் உள்ள முஸ்லிம் பெண்களிடையே உடல் பருமன் அதிகமாக உள்ளது. அனைத்து தென் மாநிலங்களிலும் தேசிய சராசரியை விட உடல் பருமனின் அளவு அதிகமாக இருப்பது கவலைக்கு காரணமாக அமைந்துள்ளது.


சாதிய வாரியாக பார்த்தால், இந்திய அளவில் பிறர் (29.6%), பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (24.6%), பட்டியலிடப்பட்ட சாதியினர் (21.6%) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (12.6%) ஆகியோரிடையே உடல் பருமன் அதிகமாக உள்ளது. இதே நிலைதான் தென்னிந்தியாவிலும் காணப்பட்டது. இந்தியாவில் கவலைக்குரிய ஒரு முக்கிய காரணமாக சுகாதாரம் உள்ளது. உடல் பருமனின் பாதிப்பு உலக சராசரியை விட மிகவும் ஆபத்தான விகிதத்தில் அதிகரித்து வருகிறது.