திமுக தேர்தல் அறிக்கையை நிறைவேற்றாததை கண்டித்து தேனியில் உள்ள தனது இல்லத்தின் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர்,
பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதிலும், தமிழக மக்களின் ஜீவாதார உரிமைகளை மீட்டெடுத்து காப்பாற்றுகின்ற அரசாகவும், விலைவாச உயராத அரசாகவும், முழுமையான மின்சாரம் பொதுமக்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கும் மாநிலமாகவும், கல்வியில் தலைசிறந்த மாநிலமாகவும், விவசாயம், தொழில் புரட்சியில் சாதனை செய்யும் மாநிலமாகவும் சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட்டு அமைதிபூங்கா மாநிலமாகவும், சிறுபான்மை மக்களுக்கு அச்சுறுத்தல் இல்லாத ஆட்சிகாலமாகவும் அதிமுக ஆட்சிகாலம் இருந்தது
திமுக தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகளை சொல்லி மக்களை திமுக நம்பவைத்தது; ஆட்சி பொறுப்பேற்ற மூன்று மாத காலத்திற்குள் தமிழகத்தின் முக்கியமான பிரச்னைகளில் எல்லாம் திமுக அரசு பின்வாங்குவதாகவே உள்ளது; திமுக அரசு எப்போதெல்லாம் நடந்து வருகிறதோ; அப்போதெல்லாம் மக்கள் விரோத அரசாகவே இருந்து வருகிறது என்றார்.
ஆரம்பத்தில் திமுக அரசை அதிமுகவினர் பாராட்டியுள்ளீர்களே? என்ற கேள்விக்கு
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அதிமுக அரசுதான் சிறப்பாக செயல்படுவதாக பிரதமர் நரேந்திரமோடியே பாராட்டியுள்ளார்கள்; திமுக ஆட்சியில் கொரோனா மரணங்கள் மறைக்கப்பட்டுள்ளன. கொரோனா என்பது தேசிய அளவிலான பேரிடர், அந்த நிலையிதான் திமுக அரசின் முயற்சிகளை நாங்கள் ஆதரித்தோம்
பிரதமரை சந்தித்த போது நீட் தேர்வு தொடர்பாக கோரிக்கை விடுத்தீர்களா? என்ற கேள்விக்கு
நீட் தேர்வு மீண்டும் தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது; சொல்லி இருக்கிறோம், மேகதாது அணை விவகாரத்தில் விவசாயிகளின் மனக்கவலையை தெரிவித்து இருக்கிறோம்,
திமுக அரசு சட்டமேலவையை கொண்டு வர திட்டமிட்டுள்ளது குறித்த கேள்விக்கு, சட்டமேலவையை எந்த நிலையிலும் நாங்கள் எதிர்ப்போம் என ஓ.பன்னீர் செல்வம் பேசினார்
அதிமுக தொண்டர்களை தொடர்பு கொண்டு கட்சி தலைமையை ஏற்க உள்ளதாக ஆடியோ வெளியிட்டு வருவது குறித்த கேள்விக்கு, அரசியல் வரலாற்றை உன்னிப்பாக கவனிப்பீர்களானால் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற ஜனநாயக முறைப்படி அடிப்படைகள் உருவாக்கப்பட்டு கடந்த நான்கரை ஆண்டுகளாக நானும் எடப்பாடி பழனிசாமியும் வழிநடத்திக் கொண்டிருக்கிறோம்.
அதிமுகவை பொறுத்தவரை ஒரு தனிப்பட்ட குடும்பமோ, தனிநபரோ ஆதிக்கம் செலுத்த முடியாத ஜனநாயக முறையை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம். எந்தெந்த நோக்கத்திற்காக அதிமுக உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கம் நிரூபித்து காட்டப்பட்டுள்ளது, அந்த நிலை தொடரும்; யார் எந்த முயற்சி எடுத்தாலும் அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது.
முல்லைப்பெரியாறு அணை நீரை விவசாயிகள் பயன்படுத்த முடியாத நிலையை செய்துள்ளது, விவசாயிகளுக்கு திமுக செய்துள்ள கொடுமையான செயல்; இந்த நிலை தொடர்ந்தால் அதிமுக போராட்டம் நடத்தும்
அதிமுக கூட்டணியில் உள்ள நீங்கள் பெட்ரோல் விலையை குறைக்க நடவடிக்கை எடுப்பீர்களா? என்ற கேள்விக்கு, பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்ற திமுகவின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றுதான் போராட்டம் நடத்தி வருகிறோம்
நடந்து முடிந்த தேர்தலில் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தாததே அதிமுக தோல்விக்கு காரணம் என முன்னாள் எம்.பி.அன்வர் ராஜா பேசி உள்ளது குறித்த கேள்விக்கு,
அன்வர் ராஜாவின் கருத்து தவறு; அதிமுகவை பொறுத்தவரை நானும், எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த அனைவரும் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் அனைத்து திட்டங்களையும் முன்னிலைப்படுத்தியே வாக்குகளை சேகரித்தோம்
தமிழக அரசின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வெளியிட உள்ளது குறித்த கேள்விக்கு,
நான் பட்ஜெட் தாக்கல் செய்த காலத்திலேயே தமிழகத்தின் நிதிநிலை குறித்து பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளேன்; தமிழக அரசு வாங்கி உள்ள கடன்கள் அனைத்தும் முதலீட்டு கடன்கள்தான், மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டே அக்கடன்கள் வாங்கப்பட்டுள்ளன; எங்கள் ஆட்சியில் இருந்த நிதித்துறை செயலாளர்தான் தற்போது நிதித்துறை செயலாளராக இருந்து வருகிறார். தமிழக நிதிநிலை குறித்து பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளேன் என ஓ.பன்னீர் செல்வம் பதிலளித்தார்.