பெண் ஐபிஎஸ் அதிகாரியை காரில் அழைத்துச் சென்று, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி-யிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசாருக்கு தமிழக  அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது




முன்னாள் முதல்வரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கவனிக்க மாவட்டங்களுக்கு சென்ற முன்னாள் சிறப்பு டிஜிபி, சென்னை திரும்பு வழியில் ஒரு மாவட்ட எல்லையில் மரியாதை நிமித்தமாக வந்து நின்ற பெண் ஐபிஎஸ் அதிகாரியை தனது காரில் ஏற்றி சிறிது தூரம் அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இது குறித்த அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி டிஜிபி, உள்துறை செயலருக்கு புகார் அனுப்பினார். இந்த விவகாரம் தமிழ்நாட்டில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்து, சிறப்பு டிஜிபி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.






இது குறித்து விசாரிக்க கூடுதல் தலைமைச்செயலாளர் ஜெயஸ்ரீரகுநந்தன் தலைமையில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் சீமா அகர்வால், அருண், சாமுண்டேஸ்வரி உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவை அமைத்தது அப்போதைய அதிமுக அரசு.  தொடர்ந்து இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர், மகளிர் அமைப்புகள் வலியுறுத்தியதால் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார் அப்போதைய டிஜிபி திரிபாதி, இதனடிப்படையில் சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி கண்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி. இந்நிலையில், இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்ற சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தனது முதல் கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. அப்போது, புகாருக்குள்ளான சிறப்பு டிஜிபியை இதுவரை சஸ்பெண்ட் செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிமன்றம் ஐபிஎஸ் அதிகாரிக்கே இந்த நிலையா என்று கவலை தெரிவித்தது. இதனையடுத்து, அந்த சிறப்பு டிஜிபியை பணியிடை நீக்கம்  செய்து அப்போதைய அதிமுக அரசு உத்தரவிட்டது.


அதன்பிறகு, தமிழ்நாட்டில் தேர்தல் நடந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சிறப்பு டிஜிபியாக இருந்தவர் மீதான விசாரணையை தொடர சிபிசிஐடி போலீசாருக்கு தற்போது அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனால், விரைவில் சிறப்பு டிஜிபியாக இருந்த நபர், அவருக்கு உதவியாக இருந்து, சென்னைக்கு புகார் தெரிவிக்க வந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியை தடுத்து நிறுத்திய செங்கல்பட்டு எஸ்.பியாக இருந்த கண்ணன் உள்ளிட்டோரிடம் விசாரணையை தொடங்க சிபிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.