கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரையில் விஜய்யைப் பார்க்க வந்த கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை தமிழ்நாடு முழுவதும் ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் விஜய்க்கு மிகப்பெரிய சரிவையும், பின்னடைவையும் உண்டாக்கிய நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை விஜய் நேற்று நேரில் சென்று சந்தித்தார்.
சிபிஐ விசாரணைக்கு என்ன பதில்:
இந்த நிலையில், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ஒரு வழக்கு சிபிஐ-யிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கின் விசாரணை தொடங்கும்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தை தனித்தனியாக சந்தித்து பேசும்போது, வழக்கு விசாரணைக்கு இந்த குடும்பம் என்ன பதில் சொல்லும்?
உயிரிழந்த 41 குடும்பங்களை சிபிஐ விசாரணை செய்யப்போகும். நான் தனிப்பட்ட முறையில் அவர்களை சந்திக்கிறேன். அவர்களுக்கு ரூபாய் 20 லட்சம் பணம் கொடுக்கிறேன். என்னைச் சந்தித்துவிட்டு சென்றுவிட்டார்கள். இப்போது இந்த சிபிஐ அதிகாரிகள் சென்று விசாரித்தால் இந்த குடும்பம் என்ன சொல்லும்? அதெல்லாம் போயிட்டு போகும், என் பையன் செத்தான் அப்படினு சொல்லும். இது என்ன மாதிரியான விசாரணை?
பாதுகாப்பு குறைபாடு:
விஜய் வருவதால்தானே கூட்டம். விஜய்யைப் பார்க்க வந்த கூட்டத்தால்தானே நெரிசல், மரணம். அப்போ எஃப்.ஐ.ஆரில் விஜய் பெயர் ஏன் இல்லை? புஸ்ஸி ஆனந்த்தான் இந்த வேனில் ஏறி பேசுகிறார். அவர் அந்த வேனில் இருக்கிறார். ஆதவ் அர்ஜுனா இந்த வேனில் இருக்கிறார். அவர் பெயர் இந்த எஃப்ஐஆரில் இல்லையே? குற்றம் யாரால் நிகழ்கிறது?
பாதுகாப்பு குறைபாடு என்று பேசக்கூடாது. என்னையைப் பத்திரமாக பாதுகாத்து என்னை இங்கே கொண்டு வந்துவிட்ட காவல்துறைக்கு நன்றி என்று சொன்னது யார்? ஒரு குற்றம் நிகழ்கிறது. அதற்கு முதன்மையான காரணம் யார்? நான் ( விஜய்) வரவில்லை என்றால் கூட்டம் இல்லை. என்னை ( விஜய்யை) பார்க்க வந்ததால்தான் கூட்டம். அப்போ யார் காரணம்?காரணமானவர்களையே இந்த வழக்கு விசாரிக்காது என்றால், அப்போது இந்த விசாரணை எப்படி இருக்கும்?
முன்ஜாமின்:
சிபிஐ விசாரணை எப்போது ஆரம்பிக்கும்? பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்கள் இவரை வந்து பார்க்கும்போது எங்கே வந்து விசாரிக்கும்? அந்த மாவட்டச் செயலாளர், புஸ்ஸி ஆனந்த் இரண்டு பெயர்தான் எஃப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டுள்ளனர். யாரோட வருகையால் இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது என்பதுதான் கேள்வி.
பாதுகாப்பு குறைபாடு என்று நீங்கள் ( நிருபர்களிடம்) சொல்லக்கூடாது. சிபிஐ விசாரித்துதான் சொல்ல வேண்டும். புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமின் கேட்கிறார். சிபிஐ விசாரணைக்குப் பிறகு முன்ஜாமின் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அப்போது சிபிஐ விசாரிக்காதா? பாதுகாக்கிறதா? ஏன் முன்ஜாமின் கேட்ட மனுவை திரும்ப பெறுகிறீர்கள்?
கூட்டணிக்கு வராவிட்டால் விஜய் மீது வழக்கு:
சிபிஐ-க்கு இந்த வழக்கை கொண்டு போவதை, விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனாவை வெளியில் வைத்திருப்பதை கூட்டணிக்கு வரவில்லை என்றால் வழக்குப்போடுவார்கள். போலீஸ் மீது தவறு இருக்கிறதா? இல்லையா? என்பதை விசாரித்து முடிவு எடுக்க வேண்டும். சேலம் பயணத்தை ஏன் கரூருக்கு திடீரென மாற்றினீர்கள்?
விஜய் அங்க வந்ததாலே கூட்டம். அவரைப் பார்க்க வந்ததாலே மக்கள் சிக்கி உயிரிழந்தார்கள். அப்போது விஜய்க்கு இந்த குற்றத்தில் பொறுப்பு இருக்கிறதா? இல்லையா? அவர் மீது தமிழக அரசு ஏன் போடவில்லை. மத்திய அரசு ஏன் வழக்குப்போடவில்லை?
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விவகாரத்தில் அதிமுக - பாஜக தலைவர்கள் விஜய்க்கு ஆதரவாக செயல்பட்ட நிலையில், விஜய்யும் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்த சூழலில், விஜய்யை அதிமுக - பாஜக கூட்டணிக்குள் இழுக்க தொடர்ந்து காய்கள் நகர்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் விஜய் அதிமுக - பாஜக கூட்டணிக்குச் செல்லாவிட்டால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று சீமான் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.