உதயநிதி நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை பார்ப்பவர்களுக்கு பிரியாணி போடுகிறார்கள் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
அனுபவ் சின்ஹா இயக்கத்தில் ஆஸ்மான் குரானா மற்றும் இஷா தல்வார் நடிப்பில் இந்தியில் உருவான திரைப்படம் ஆர்ட்டிகிள் 15. இந்திய சாதிய அடுக்குகள் மற்றும் சாதிய ஒடுக்குமுறைகளை மையமாகவும் கொண்டு எடுக்கப்பட இத்திரைப்படம் வெளியானபோது இந்திய அளவில் பெரிதாக பேசப்பட்டது. திரைப்பட ரசிகர் தரப்பில் இப்படம் பெரும் வரவேற்பினைப் பெற்றது. இதனையடுத்து, இத்திரைப்படத்தினை தமிழில் அருண்ராஜா காமராஜ் இயக்கினார். போனிகபூர் தயாரிக்க சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான உதயநிதி நடிப்பில் இத்திரைப்படம் நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் திரையரங்குகளில் வெளியானது.
உதயநிதி நடிப்பில் எந்த படம் வெளியானாலும் திமுக நிர்வாகிகள் அப்படத்தை பார்ப்பதற்கும், மற்றவர்களை பார்க்க வைக்கவும் ஆர்வம் காட்டுவது வழக்கம். அதே போல நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தையும் திமுக நிர்வாகிகள் தொடர்ந்து திரையரங்குகளை பார்த்துவருவதோடு, இத்திரைப்படத்தை பார்ப்பதற்கு இலவச டிக்கெட்டுகள் போன்றவற்றை வழங்கி வருகின்றனர். தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சன்.ராமநாதன் தன்னுடைய நிகழ்ச்சி நிரலில் சாந்தி திரையரங்கில் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை பார்வையிடுவதையும் குறிப்பிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதே போல இத்திரைப்படம் வெளியானதையொட்டி புதுச்சேரியில் திரைபப்டம் பார்க்க வந்த பொதுமக்கள் மற்றும் ரசிகர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினர். இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்கி கொண்டிருக்கும் கழக தலைவர் அவர்களின் நிழலாக உள்ள இளைய சூரியன் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் நடித்த "நெஞ்சுக்கு நீதி" காவியத்தை பார்த்தேன் என்று நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றத்தில் உதயநிதிக்கு வாழ்க கோஷம் போட்டவருமான கேஆர்என் ராஜேஷ்குமார் கூறியிருந்தார். அதே போல இளஞ்சூரியன் நடிப்பில் உருவாகியுள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தைப் பார்க்க கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கு இலவசக்காட்சிகள் திரையிடப்படும் என்று மதுரை மாவட்டத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இது போன்று திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இத்திரைப்படத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது பலரை முகம் சுளிக்கவைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில், செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நெஞ்சுக்கு நீதியை இந்தியில் எடுக்க வேண்டும் என்று நேரு கூறுகிறார். இந்தியில் ஆர்டிக்கிள் 15 என்ற பெயரில் எடுத்த படம் தான் இங்கு நெஞ்சுக்கு நீதி என்று எடுக்கப்பட்டிருக்கிறது. அது அய்யாவுக்குத் தெரியல. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், அவரது மகன் கதிரவன் ஆகியோர் திரைப்படம் பார்க்க இலவச அனுமதி கொடுத்துவிட்டு, வரும்போது பிரியாணி போடுகிறார்கள். ஆனால் அப்படியிருந்தும் கூட்டம் வரவில்லை என்கிறார்கள். அதுக்கு நாம எதுவும் செய்ய முடியாது. அந்த படத்தை அமைச்சர் பார்க்கனும், மாமன்ற, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்க்கனும் அதை பாராட்டி ட்விட்டரில் பதிவு போடவேண்டும். பெரியாரை நான் பார்த்ததில்லை. ஆனால் உதயநிதியை காக்கிச்சட்டையில் பார்க்கையில் பெரியாரை பார்ப்பது போலவே இருக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் கூறுகிறார். என்ன பெரியாருக்கு வந்த சோதனை. இவர்கள் எப்படி மகத்தான மக்கள் பணியை பார்க்கிறார்கள் பாருங்கள் என்று கூறியிருந்தார்.
அதோடு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற, மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தம்பி உதயநிதி நடித்த படத்தை முதல் காட்சி பார்த்துவிட்டுப் படம் எடுத்துப் பகிர்ந்து படத்தைப் பாராட்டி பதிவிடுகிறார்கள். டிக்கெட்களை வாங்கி இலவசமாகக் கொடுக்கிறார்கள். படம் பார்ப்பவர்களுக்கு பிரியாணி போடுகிறார்கள். சிறப்பான மக்கள் பணி! வாழ்க திராவிட மாடல் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து பதிவிட்டுள்ளார்.