பட்டிணப் பிரவேச நிகழ்ச்சியில் அண்ணாமலை பல்லக்குத் தூக்கிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தை அடுத்த தருமபுரத்தில் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் ஆதீனத்தில், ஆண்டுதோறும் ஸ்ரீ ஞானபுரீஸ்வரசுவாமி கோயில் பெருவிழா, குருபூஜைவிழா, பட்டணப் பிரவேசம் விழா ஆகிய மூன்றும், வைகாசி மாதம் 11 நாட்கள் கொண்டாடப்படும். இதில் 11 ம் திருநாள் அன்று ஆதீனத்தை தோற்றுவித்த ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் குருபூஜை விழா மற்றும் பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சியும் பாரம்பரியமாக நடப்பது வழக்கம். இவ்விழாவில் குருமகா சன்னிதானத்தை பல்லக்கில் அமரவைத்து பக்தர்கள் தூக்கி சென்று ஆதீன திருடத்தின் நான்கு வீதிகளில் சுற்றி பட்டிணப் பிரவேசம் வலம் வருவது நடைமுறை.
இந்நிலையில், மனிதனை மனிதன் தூக்கிசெல்லும் பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டுமென்று திராவிட இயக்க அமைப்புகள் கோரிக்கை விடுத்தை அடுத்து கடந்த மாதம் பட்டிணப் பிரவேச நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி தடைவிதித்தார். ஆதினங்கள், ஜீயர், இந்து மத அமைப்புகள், பாஜகவினர் உள்பட பலர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். பட்டினப்பிரவேசத்திற்கு தடை விதித்தால் நானே பல்லக்கை தூக்குவேன் என்றும், பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சியில் நானும் கலந்துகொள்வேன் என்று ஹெச்.ராஜாவும் தெரிவித்திருந்தனர்.
பல்வேறு ஆதீனங்கள் முதல்வரை சந்தித்து பட்டிணப் பிரவேசம் தடையை நீக்க கோரிக்கை வைத்த நிலையில், பல்லக்கு தூக்கும் நிகழ்விற்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கி கொள்வதாக கடந்த 7 ம் தேதி அரசு அறிவித்தது. இதனால், பட்டிணப் பிரவேச நிகழ்ச்சி திட்டமிட்ட படி நேற்று கோலாகலமாக நடைபெற்றது. டிஐஜி தலைமையில் 2 எஸ்.பி.க்கள் உட்பட 600 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருஆபரணங்கள் அணிந்துகொண்டு திருக்கூட்ட அடியவர்கள் புடைசூழ பல்லக்கில் வலம் வந்தார். இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பல்லக்கை சில நொடிகள் சுமந்து சென்றார். அவருடன், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவும் கலந்து கொண்டார்.
இதுகுறித்து தன் டிவிட்டர் பக்கத்தில் ”22ஆம் தேதி தருமபுர ஆதினமான ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் பட்டின பிரவேச நிகழ்ச்சியில் நாம் பங்கேற்போம் என்றிருந்தோம். அதே போல் இன்று இந்த வரலாற்று நிகழ்வில் ஒரு சிஷ்யனாகப் பங்கேற்றதை என் பாக்கியமாகக் கருதுகிறேன். தமிழகத்தில் ஆன்மீக மறுமலர்ச்சி! “ என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
“தடைகள் பல கடந்து இன்று சிறப்பாக நடைபெறும் தருமபுர ஆதீன பட்டணப்பிரவேச நிகழ்ச்சியில் மாநில தலைவர் சகோதரர் திரு.அண்ணாமலையுடன் கலந்துகொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. ஹிந்து ஒற்றுமை ஒன்றே தீர்வு!” ஹெச்.ராஜா பதிவிட்டுள்ளார்.
அண்ணாமலை, ஹெச்.ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட பட்டணபிரவேச புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.