சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான என்.ஆர் இளங்கோ ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாதிட்டு வருகிறார். இரு தரப்பினருக்கும் கார சார விவாதம் நடைபெற்று வருகிறது.
செந்தில் பாலாஜி தரப்பு வாதம்:
- செந்தில் பாலாஜி கைது தொடர்பாக குற்றவியல் நடைமுறை சட்டப்படி நோட்டீஸ் வழங்கவில்லை.
- ஏற்கனவே இதே நீதிமன்றத்தில் தேசிய முகமை தொடர்ந்த வழக்கில் ஆட்கொணர்வு வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
- செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்த பின் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தான். உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுகளின்படி ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம். அட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததுதான் என்பதற்கு ஆதரவாக உள்ள உச்சநீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிகாட்டி என்.ஆர்.இளங்கோ வாதத்தை முன் வைத்தார்.
- அமைச்சர் செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் இல்லை என்றால் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்காது. செந்தில் பாலாஜி கைதின் போது சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை.
- செல்லுபடியாகக் கூடிய ரிமாண்ட் உத்தரவு இருந்தால் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கதல்ல என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. சட்டத்தால் உருவாக்கப்பட்ட நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என நக்கீரன் கோபால் உள்ளிட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை சுட்டி காட்டி வாதத்தை முன்வைத்தார்.
- இருப்பினும் வழக்கு விசாரணைக்கு உகந்ததாக இருந்தாலும், அதை ஏற்றுக் கொள்வது உயர்நீதிமன்றத்தின் அதிகாரம் - நீதிபதிகள்.
- கைது குறித்து தகவலும், கைதுக்கான காரணங்களையும் தெரிவிப்பது என்பது அடிப்படை உரிமை அதை அரசியல் சாசனத்தின் 15 ஏ பிரிவில் அம்பேத்கர் சேர்த்திருக்கிறார். நீதிமன்ற காவலில் வைத்து பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானதாக இருந்தால், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தான்.
- உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை இடைக்கால உத்தரவாக கருத முடியாது.
- சோதனையின் போது இரவு 11 மணி முதல் ஒரு மணி வரை செந்தில் பாலாஜிக்கு என்ன நடந்தது என யாருக்கும் தெரியாது.
- நீதிமன்ற காவலில் வைக்க எதிர்ப்பு தெரிவித்த எங்கள் தரப்பு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. 13ம் தேதி இரவு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டது.
- குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் 41 ஏ பிரிவின் கீழ் நோட்டீஸ் கொடுக்க வேண்டும். இந்த பிரிவு தங்களுக்கு பொருந்தாது என அமலாக்கப் பிரிவு தரப்பில் கூறுகிறார்கள்.
- குற்றவியல் நடைமுறை சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதற்கு எந்த காரணிகளும் இல்லை
என என்.ஆர். இளங்கோ அவர் தரப்பு வாதத்தை முன் வைத்தார். மேலும் மருத்துவமனையில் உள்ள நாட்களை காவலில் உள்ள நாட்களாக எடுத்துக்கொள்ளக்கூடாது என தனியாக மனு தாக்கல் செய்துள்ளோம் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.