ராபி பருவம் 2022, 23 ஆம் ஆண்டுக்கு சம்பா நெல் பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 15 கடைசி நாளாக காலம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு ஷங்கர் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் 2016 பருவம் முதல் கரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.




இந்த திட்டம் கரூர் மாவட்டத்தில் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பஜாஜ் அலையன்ஸ் பொதுக் காப்பீட்டு நிறுவனம் சென்னை நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகள் இந்தத் திட்டத்தில் பதிவு செய்யும்போது முன்மொழி விண்ணப்பத்துடன், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு சாகுபடி அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், ஆகியவற்றை இணைத்து பிரீமிய தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதினை காப்பீடு செய்யும் இடங்களான பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வங்கிகளில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.




பயிர் காப்பீடு தொகையில் விவசாயிகள் 1.5% மட்டும் அதாவது ஏக்கருக்கு நெல் பயிருக்கும் ரூ.557.23, மக்காச்சோளம் பயிருக்கு ரூ.387.5, சோளம் பயிருக்கு ரூ 127.46 மற்றும் நிலக்கடலை பயிருக்கு ரூ 446.08 மட்டும் பிரீமியர் தொகை செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம். எனவே விவசாயிகள் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடர்களையும், பூச்சி நோய் தாக்குதலால் ஏற்படும் மகசூல் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் கருத்தில் கொண்டு சாகுபடி செய்துள்ள சம்பா நெல் பயிரிடை நவம்பர் 15ம் தேதிக்குள்ளும், மக்காச்சோளம் பயிரினை நவம்பர் 30ஆம் தேதிக்குள்ளும், அருகில் உள்ள பொது சேவை மையங்களிலோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ உரிய காப்பீடு கட்டணம் செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




 


விவசாயிகள் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் போது, எதிர்பாராத காலநிலை மாற்றங்களால் இழப்பு ஏற்படுகிறது. அந்தக் காலகட்டங்களில் விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டங்களை பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்வதன் மூலமாக தவிர்க்கலாம். கரூர் மாவட்டத்தில் தற்போது ரபி பருவத்தில் சாகுபடி செய்யும் வாழை, மரவள்ளி, தக்காளி, மிளகாய், வெங்காயம் போன்ற பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய அரசால் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, கரூர் மாவட்ட விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் ரபி பருவத்தில் அறிவிப்பு செய்யப்பட்ட குறுவட்டங்களில் சாகுபடி செய்யப்படும் வாழை, மரவள்ளி, தக்காளி, வெங்காயம் மற்றும் மிளகாய் போன்ற பயிர்களுக்கு பிரீமியத் தொகையாக ஏக்கர் 1க்கு ரூ.3400ம், மரவள்ளிக்கு ரூ.1605-ம், 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதிக்குள், தக்காளிக்கு ரூ.853ம், வெங்காயத்திற்கு ரூ.2075 மற்றும் மிளகாய்க்கு ரூ.1175-ம், 2023 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதிக்குள் பிரீமியம் தொகையை தொடக்க மேன்மை கூட்டுறவு சங்கங்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது இ-சேவை மையங்களில் செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன்படலாம்.