தமிழ்நாட்டின் பொம்மை உற்பத்தித் தொழிற்சாலையானது மாநில அரசிடமிருந்து தேவையான ஆதரவைப் பெற்றால் கிட்டத்தட்ட 30,000 வேலைகளை எளிதாக உருவாக்க முடியும், இது இந்தத் துறைக்கு உந்துதலை வழங்கும் என்று தமிழ்நாடு பொம்மை வியாபாரிகள் சங்கத் தலைவர் சந்தோஷ்குமார் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பொம்மை உற்பத்தியாளர்கள் இருப்பதால், சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுக இணைப்புடன் தொழில்துறைக்கு சிறந்த இடமாக இருக்கும் என்று மேலும் அவர் தெரிவித்தார்.
புதுடெல்லியில் தேசிய அளவிலான பொம்மை கண்காட்சி நடைபெற்றபோது, உற்பத்திகாகத் தெலங்கானா அரசு 1,000 ஏக்கர் நிலத்தை தொழிலுக்காக ஒதுக்கியது. "இது மிகப் பெரிய மற்றும் பாசிட்டிவ்வான நடவடிக்கையாகும், நிறைய தொழில்துறையினர் இதனால் முன்கூட்டியே சென்று தங்கள் இடங்களை ஹைதராபாத்தில் முன்பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டிலும் இதே போன்ற வகையிலான ஆதரவு தேவை." என்கிறார். அவரைப் பொறுத்தவரை, தென்னகத்தில் உள்ள பொம்மை சந்தைக்கான தலைநகரமாக சென்னை உள்ளது என்கிறார். இங்கு அதற்கான அதிக முதலீட்டாளர்கள் இருப்பதும் ஒரு காரணம்.
"அண்டை மாநிலமான கேரளா, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்துள்ளனர், ஏனென்றால் நம்மிடம் துறைமுக இணைப்பு உள்ளது. இது பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதிக்கு எளிதானது," என்று அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் மட்டும் பொம்மைத் தொழிலின் மதிப்பு ரூபாய் 600 கோடி என்றும், உற்பத்தி மற்றும் கிடங்கு இரண்டிற்கும் அரசு மானிய விலையில் நிலம் வழங்கினால் அது மேலும் வளர்ச்சி அடையும் என்றும் சந்தோஷ்குமார் மேலும் குறிப்பிட்டார்.
"சென்னை துறைமுகம் இருப்பதன் காரணத்தால் மிகவும் வலுவான சந்தையாக உள்ளது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக மற்ற எல்லா அரசாங்கங்களும் வழங்கும் ஆதரவு தமிழ்நாட்டில் உள்ள பொம்மை உற்பத்தி தொழிலாளர்களுக்கு இல்லை," என்று சோகத்துடன் பகிர்கிறார்.
தேசிய அளவிலான தொழில் வளர்ச்சி குறித்துப் பேசுகையில்,"புது டெல்லி, மும்பை, சென்னை போன்ற இடங்களில் தரமற்ற பொம்மைகளை விற்கும் கிரே மார்க்கெட் செழித்து வளர்ந்தது. ஏனெனில் பொம்மை தயாரிப்புக்கான ஒழுங்குமுறை இல்லாததால் தயாரிப்பு முறை குறித்த எந்த விவரக்குறிப்புகளும் இல்லாதது மற்றும் தரம் இல்லாமல் பொருட்கள் கொண்டு உற்பத்தி செய்தல் போன்ற காரணத்தால் இந்த கள்ளச் சந்தை வளர்ந்தது” என்று அவர் கூறினார்.
மத்திய அரசின் 'ஆத்மநிர்பர் பாரத்' செயல்படத் தொடங்கியதை அடுத்து சீன பொம்மைகள் இறக்குமதி குறைந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். முன்பு 90 சதவிகிதமாக இருந்த இறக்குமதி தற்போது 5 சதவிகிதம் குறைந்துள்ளது என்றார் அவர்.
இதே கருத்தை எதிரொலிக்கும் இந்திய பொம்மை சங்கத்தின் தலைவர் அஜய் அகர்வால், இறக்குமதி செய்யப்படும் பொம்மைகளுக்கான சுங்க வரியை அதிகரிப்பது மற்றும் பொம்மைகளுக்கு பிஐஎஸ் சான்றிதழை கட்டாயமாக்குவது போன்ற அரசின் கொள்கை உள்நாட்டு பொம்மை உற்பத்தி துறைக்கு ஊக்கத்தை அளித்துள்ளது எனக் கூறியுள்ளார்.
இந்திய பொம்மை சந்தை 12 சதவீதத்திற்கு மேல் வளர்ந்து வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கிட்டத்தட்ட 80 சதவீத பொம்மைகள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் இன்று, இறக்குமதி வியத்தகு அளவில் குறைந்துவிட்டதால், சூழ்நிலை மாறிவிட்டது என்று அவர் கூறினார்.
தமிழ்நாடு, ஆந்திரா, புது தில்லி ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து மகாராஷ்டிரா முக்கிய பொம்மைச் சந்தையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.