தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 9-ம் தேதி திருப்புதல் தேர்வு தொடங்கியது. 10-ம் தேதி விடுமுறை 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைப்பெற்றது. கடந்த 14-ம் தேதி பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வும், பன்னிரண்டாம் வகுப்பு கணினி தேர்வும் நடக்க இருந்தது. இந்நிலையில் இதற்கான வினாத்தாள்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் வெளியாகி விட்டதாக தேர்வுக்கு முந்தைய நாள் நள்ளிரவு தகவல் பரவியது. இதனால் திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பரபரப்பு எழுந்தது.


இந்நிலையில், திருவண்ணாமலையில் 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வு விணாத்தாள்களை வெளியிட்ட இரண்டு தனியார் பள்ளிகளிடம் விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வினாத்தாள் வெளியானது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்திய பள்ளிக்கல்வித்துறை இந்த வினாத்தாள் கசிவதற்கு காரணமாக இருந்த அரசு அலுவலகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தது. மேலும் ஏற்கெனவே வெளியான தேர்வு அட்டவணையின்படி தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சார்பில் ஒரு அறிக்கை ஒன்று வெளியானது.


அதில், "தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 09.02.2022 முதல் திருப்புதல் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் சில தேர்வுகளுக்கான வினாத்தள் தேர்வு நடைபெறும் முன்பே சமூக வலைதளங்களில் வெளிவந்ததாக செய்தி ஊடங்கள் வழியாக அறியப்பட்டதன் அடிப்படையில், துறை ரீதியாக விரிவான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


அந்த ஆய்வில் திருவண்ணாமலை மாவட்டம் போலூர் ஆக்சிலியம் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மற்றும் வந்தவாசியிலுள்ள ஹாசினி இன்டர்நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளிலிருந்து வினாத்தாள் வெளியானது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு காரணமான பள்ளிகளைச் சார்ந்த நபர்களின் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், இத்தேர்வுகள் நடத்துவது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் அளித்த வழிகாட்டுதல்களை சரியாக பின்பற்றாத அரசு அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும். ஏற்கெனவே வெளியிடப்பட்ட அட்டவணையின்படி திருப்புதல் தேர்வுகள் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து நடைபெறும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண