கோயில் நிர்வாகத்துக்குக் கிடைக்கும் பணத்தை வைத்து அந்த சமயம் சார்ந்த கல்லூரிகளை இந்து சமய அறநிலையத்துறை கட்டுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. தலைமை நீதிபதி சஞ்சீப் பனர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை அளித்துள்ளது.
”கல்வி தருவது கல்லூரிகளைக் கட்டுவது நல்ல சிந்தனைதான் என்றாலும் மதம் சார்ந்த நிறுவனங்களில் இருந்து வரும் பணம் மதச்சார்பற்ற பணமாக இருக்காது. கல்வி அளிப்பது மதச்சார்பற்றதாக இருக்கவேண்டும்.அதனால் கோயில் நிர்வாகத்துக்குத் தரப்படும் பணத்தை கல்விநிலையங்களைக் கட்ட உபயோகிக்கக் கூடாது” என தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
மேலும், கோயில் நிர்வாகத்துக்கு பக்தர்கள் தரும் பணம் ஏதோ காரணத்துக்காகத்தான் தரப்படுகிறது.அதனை கல்லூரிகள் கட்டுவதற்கு உபயோகிக்கக் கூடாது எனவும் கூறியுள்ளது.
மேலும், இந்துமதம் தொடர்பான அறிமுகங்களை மட்டும் ஒருமாதத்துக்குள் இந்துசமய அறநிலையச் சட்டம் பிரிவு 66ன் கீழ் கல்லூரிப் பாடத்தில் சேர்க்கச் சொல்லியும் உத்தரவு பிறப்பித்துள்ளது.இதன்படி சென்னை, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவரும் இந்துசமய அறநிலையக் கல்லூரிகளில் இந்தப் பாடம் சேர்க்கப்படும்.
இந்து சமய அறநிலயத்துறை அமைச்சார் சேகர் பாபு சட்டப்பேர்வைக் கூட்டத் தொடரில் புதிய கல்லூரிகள் கட்டப்படும் என அறிவித்திருந்தார். இதனை எதிர்த்து டி.ஆர். ரமேஷ் என்பவர் அமைச்சரின் முடிவு யாரையும் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்டது என்கிற அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிதாக தொடங்கப்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவிப்பேராசிரியர் உள்பட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியாகியிருந்தது. ஆர்வமும், தகுதியுள்ளவர்கள் அக்டோபர் 18 அன்று நடைபெற்ற நேர்முகத்தேர்வில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை கொளத்தூரில் புதிதாக அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்நிலையில்தான் அந்தக் கல்லூரிக்கு உதவிப்பேராசிரியர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு அரசால் வெளியிடப்பட்டது. கொளத்தூர் உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்தக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இந்தக் கல்லூரிகளிலேயே இன்னும் ஆட்சேர்ப்பு சரிவர நடந்து முடிக்காத நிலையில்தான் புதிதாக கல்லூரிகள் கட்டுவதற்கான திட்டத்தை அரசு வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.