ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாததால், விவசாயிகளின் குவியல்களிலேயே  மீண்டும் முளைத்த நெல்மணிகளால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்

 


முளைத்த நெல்


 


கொரோனா இரண்டாவது அலை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனால் கொரோனா பரவல் காரணமாக வரும் 31-ஆம் தேதி வரை எந்த தளர்வும் இல்லாத முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மேலும் ஒரு வாரத்திற்கு  (7-ஆம் தேதி) வரை எந்த தளர்வும் இல்லாத முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 


 

பல்வேறு இடங்களில் விவசாய பொருட்கள் தேக்கமடைந்துவரும் சூழலில் மீண்டும் ஒருவாரம் ஊரடங்கு அமல்படுத்தியது விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்துவரும் சூழலில் நெல் மூட்டைகள் தேங்குவதால் மழை நீரில் முளைத்துவிடுவதாக வேதனை தெரிவித்துள்ளனர் விவசாயிகள். மதுரை  உசிலம்பட்டி அடுத்த செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமப்புற பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில்  கோடை விவசாயமாக நெல் சாகுபடி செய்துள்ளனர். நல்ல மழைப் பொழிவு இருந்ததால் நெல் மணிகளும் நன்கு விளைந்துள்ள சூழலில் கடந்த ஒரு மாதமாக அறுவடை செய்யப்பட்டது. இந்நிலையில் அறுவடை பணிகள் முடிந்து நெல் மூடைகளை அரசு கொள்முதல் நிலையம் அமைத்து கொள்முதல் செய்யாத சூழலில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை விவசாயிகள் குவியல்கள் அமைத்து பாதுகாத்து வருகின்றனர்.

 



 

தற்போதைய தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நேரத்தில் வியாபாரிகளும் அதிகம் வருவதில்லை என்றும் வரும் ஒருசில வியாபாரிகளிலும் குறைந்த விலைக்கு நெல்லை கொள்முதல் செய்வதால் பெரும் நஷ்டம் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். மேலும் தற்போது அடிக்கடி மழை பெய்து வரும் சூழலில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள நெல் மணிகள் விவசாயிகளின் குவியல்களிலேயே மீண்டும் முளைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். அரசும் மாவட்ட நிர்வாகமும் விரைவில் கொள்முதல் நிலையங்களை அமைத்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இது குறித்து நம்மிடம் திடியன் கிராமத்தை சேர்ந்த தங்கமலை என்ற விவசாயி...," சம்சாரிகள் ’கோடை அறுவடை நல்லபடியா முடிஞ்சுருச்சுடா மூணுசாமி’ நிம்மதியா இருந்தோம். ஆனா இந்த கொரோனாவால அறுத்த நெல்ல விக்கெ முடியல. பஸ்ஸு எதுவும் சரியா இல்லாததால வியாபாரிக யாரும் ஏரெடுத்து வாரதில்ல. வார.., ஒரு சில வியாபாரிகளும் அடிமாட்டு ரேட்டுக்கூட வெல கேக்க மாட்ராங்க. 1400 ரூவா போற மூட்டைய எழனூறு ரூவாய்க்கு கேட்டா எப்புடிங்க கட்டும். என்ன செய்றதுனு தெரியாம விழி பிதிங்கி நிக்றோம். இப்படி கஷ்டமான சூழல்ல பேயிர மழையில நெல்லுபூரா முளைக்க ஆரம்பிக்குதுக. எங்க நெலமைய கவர்மெண்டு தான் யோசிச்சு உதவனும். நெல் கொள்முதல் நிலையம் அமைச்சு உரிய விலைக்கு வாங்கனும்" என்றார் வேதனையுடன்.

 


இது குறித்து வேளாண் தகவல் தொடர்பு தொழில் நுட்பவியலாளர் திருச்செல்வத்திடம் பேசியபோது, "நெல் மட்டுமில்ல அனைத்து விவசாய விளை பொருட்களையும் நார்மல் டயத்தில விற்பனை செய்வதே கஷ்டமானது. தளர்வுகள் கொண்ட ஊரடங்கில் சவாலானது. தற்போது முழு ஊரடங்கிள் குதிரை கொம்பான விஷயமாகத்தான் பார்க்கமுடிகிறது.  யாரும் வேலைக்கு போகாத சூழலில் பொருட்களை வாங்கமுடியல. அதனால் சிக்கல் இங்கிருந்தே உருவாகிறது.  இதனால் விவசாயிகள் விளைக்கும் பொருட்கள் விற்பனையில் தடுமாற்றமடைகிறது. எனவே மாவட்ட ரீதியாக வார்ரூம் ஒன்றை அமைத்து ஒவ்வொரு வருவாய் கிராமங்களையும் மொபைல் ஆப் மூலம் இணைக்க வேண்டும். ஒவ்வொரு விவசாயியும் தான் என்ன பொருளை விளைவிக்கிறார். எவ்வளவு விளை பொருட்களை வழங்க முடியும் என்ற தரவுகளை அளிக்க வேண்டும்.


 

அதனை ஒவ்வொரு கிராமத்தில் இருக்கும் நம்பிக்கையான நபர்கள் தகவலை ஆப் மூலம் தெரிவிக்க வேண்டும். இந்த தரவுகள் மூலம் எந்த மாவட்டத்திற்கு என்ன பொருட்கள் தேவைப்படுகிறது என்று முடிவு செய்து டிரான்ஸ்போர்டுகள் மூலம் அனுப்பவேண்டும். இதனால் தேவையை பூர்த்தி செய்யமுடியும், தேக்கத்தை கட்டுப்படுத்த முடியும். விவசாயிகளின் விளை பொருட்களையும் விற்று அவர்களுக்கு பணத்தை விரைவாக கொடுக்க முடியும். அரசு அனைத்து பொருட்களை நியாயமான விலை கொடுத்து வாங்கும்போது விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாது. அதிக பொருட்கள் தேக்கமடையும்போது அரசு மதிப்புக்கூட்டி பொருளாக மாற்றி தேவையான நேரத்தில் விற்பனை செய்யலாம். மலர்கள் தேங்கும்போது செண்ட் நிறுவனங்களுக்கும், காய்கறி மிஞ்சும்போது வத்தல் நிறுவங்களுக்கும் மொத்தமாக வழங்கும் போது தேக்கமடையாது. அதையும் தாண்டி பொருட்கள் அதிகமாக இருந்தால் ரேஷன் கடையில் கொடுப்பது போல் விலையில்லாமல் பொதுமக்களுக்கு வழங்கலாம். இதனால் பொருட்களை விவசாயி வீணாக கீழே கொட்டாமல் விற்பனை செய்திடுவார்கள். இவ்வாறான மாற்று சிந்தனைகள் இல்லாமல் இந்த சிக்கல்களை சரிசெய்ய முடியாது. இவை சாத்தியப்படாது என்று நினைக்காமல் அரசு கண்டிப்பாக இது போன்ற விசயங்களை தைரியமாக சரியான முறையில் செயல்படுத்தினால் தமிழகம் விவசாயத்துறையில் மிகப்பெரும் வெற்றியை காணலாம்" என்றார்.