தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சென்னைக்கு புறநகரில் அதாவது கிளாம்பாக்கத்தில் ரூபாய் 400 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பேருந்து நிலையத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதாவது டிசம்பர் 30ஆம் தேதி நேரடியாகச் சென்று திறந்து வைத்தார். இந்த பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயரிடப்பட்டுள்ளது. 


கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்:


நேற்றே முதலமைச்சர் இந்த பேருந்து நிலையத்தினை திறந்து வைத்திருந்தாலும், இந்த பேருந்து நிலையம் பொங்கலுக்குப் பின்னரே முழு பயன்பாண்டிற்கு வரும் என கூறப்பட்டது. முதலில் தென்மாவட்டங்கள் செல்லும் பேருந்துகள் மட்டும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மேற்கு மாவட்டங்களான ஈரோடு, கோவை செல்லும்  மற்றும் அங்கிருந்து வரும் பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றது.


பொங்கலை முன்னிட்டு ஏற்கனவே பொதுமக்கள் முன்பதிவு செய்திருப்பார்கள் என்பதால், 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை முன்பதிவு செய்தவர்கள் அனைவரும் கோயம்பேட்டில் இருந்து தங்களது பயணத்தினை தொடர்ந்து கொள்ளலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் இன்று அதாவது டிசம்பர் 31ஆம் தேதி போக்குவரத்து துறை தரப்பில் இருந்து புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


அதாவது கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து விழுப்புரம், கும்பகோணம், சேலம், ஈசிஆர் மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு பேருந்து இயக்கப்படும் எனவும் மற்ற பகுதிகளுக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதனால் ஜனவரி 30ஆம் தேதி வரை வெளியூரில் இருந்து கோயம்பேடு வருவதற்காக முன்பதிவு செய்த பயணிகளுக்கும் கோயம்பேடுவில் இருந்து வெளியூர் செல்ல முன்பதிவு செய்தவர்களுக்கு கிளாம்பாக்கம் முதல் கோயம்பேடு வரையிலான கட்டணம் வங்கிக் கணக்கில் திருப்பு அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அவதிப்படும் பயணிகள்


வெளியூர் செல்லும் பயணிகள் உரிய நேரத்தில் பயணத்தினை தொடங்கினாலும் கோயம்பேட்டில் இருந்து சென்னை புறநகரை அடைவதற்கே நீண்ட நேரம் எடுத்துக்கொள்கின்றது. இதனால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் பயண நேரம் திட்டமிட்டதைவிட அதிகமாகிவிடுகின்றது. இதனைத் தவிர்க்க தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சென்னை புறநகரில் புதிய பேருந்து நிலையம், அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் தனித்தனியே நிற்பதற்கு ஏதுவாக சுமார் 88 ஏக்கரில் கட்டப்பட்டுள்ளது. 


இந்நிலையில் பயணிகளுக்கு போக்குவரத்துக்கழகம் கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு இடைப்பட்ட தூரத்திற்கான பயண கட்டணத்தினை திருப்பிக் கொடுத்துவிடுகின்றோம் எனக் கூறினாலும், பயணிகள் ஏற்கனவே திட்டமிட்டிருந்த கோயம்பேட்டில் இருந்தோ அல்லது பயணிகள் தங்களது பகுதியில் இருந்தோ கிளாம்பக்கத்தினை அடைவதற்கான பயண நேரம் என்பதும் ரொம்பவே அதிகம்.


இந்த பயண நேரத்தினை குறைக்க பயணிகளுக்கு ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தாலும் சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் உரிய நேரத்தில் கிளாம்பாக்கத்திற்குச் சென்று பேருந்தினை பிடிப்பது என்பது மக்களுக்கு மனஉளைச்சலுக்கு  ஆளாக்கும் என கூறிவருகின்றனர். இது மட்டும் இல்லாமல் கிளாம்பக்கத்திற்கு மெட்ரோ சேவை விரைவில் பயன்பாட்டிற்கு வந்தால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகின்றது.