Madurai azhagar kovil: மதுரை அழகர் கோயிலில் நாள்தோறும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை, அமைச்சர் சேகர்பாபு தொடங்கப்பட்டுள்ளது.
கோயிலில் நாள் முழுவதும் பிரசாதம்:
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தபிறகு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயில்களில் பக்தர்களுக்கு, நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் கடந்த 2022ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடர்ந்து இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, படிப்படியாக பல்வேறு கோயில்களிலும் தற்போது நாள் முழுவதும் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மதுரை அழகர் கோயிலிலும் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மதுரை அழகர் கோயிலில் பிரசாதம்:
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவகத்தில் கோவில்களில் வழங்கப்படும் அன்னதானம் மற்றும் பிரசாதங்களை உணவு பாதுகாப்பு ஆலோசகர்கள் தரம் உறுதி செய்து செயலி மூலம் பதிவேற்றும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்தார். அதோடு, மதுரை கள்ளழகர் கோவிலில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தையும், காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இதேபோன்று திருவல்லிக்கேணி, திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம் மற்றும் ராமேஸ்வரம் ஆகிய கோயில்களிலும் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
82 ஆயிரம் பக்தர்கள் பயன்பெறுகின்றனர் - சேகர்பாபு:
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “திமுக ஆட்சியில் அறநிலையத்துறையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இரண்டு கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வந்த நாள் முழுவதும் அன்னதானத் திட்டம், 8 கோவில்களுக்கும், 754 கோவில்களில் வழங்கப்பட்டு வந்த ஒருவேளை அன்னதானத் திட்டம் 764 கோவில்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டு நாள்தோறும் சுமார் 82 ஆயிரம் பக்தர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
பெரியபாளையம், மேல்மலையனூர், ஆனைமலை ஆகிய 3 கோயில்களில் முழுநேர அன்னதானத் திட்டமும், 7 கோவில்களில் ஒருவேளை அன்னதானத் திட்டமும் தொடங்கப்படவுள்ளன. பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோயில் சார்பில் நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு 4,000 மாணவ, மாணவியர் பயனடைந்து வருகின்றனர். நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் 15 கோவில்களில் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தாண்டு மேலும் 5 கோவில்களில் விரிவுப்படுத்தப்படவுள்ளன.
பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் - அமைச்சர்:
அன்னதானம் தொடர்பான குறைபாடுகள் ஏதும் இருப்பின் பொதுமக்கள் கோவில் செயலி வாயிலாகவும், துறை இணையதளத்தில் "குறைகளை பதிவிடுக" என்ற பிரிவின் வாயிலாகவும் கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும் தெரிவிக்கலாம். அந்தந்த கோவில்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள இணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர்களின் தொலைபேசி எண்கள் வாயிலாகவும் குறைகளை தெரிவிக்கலாம். இதுவரை ரூ.5,217 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் ரூ.100 கோடி கோடி மதிப்பீட்டிலான கோவில் சொத்து மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. 2 ஆயிரம் கோவில்கள் ஒரு கால பூஜையில் இணைக்கப்பட்டுள்ளன” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.