தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே மழை பரவலாக பெய்து வருகிறது. இந்த நிலையில், வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: “கடல் பகுதிகளில் வளிமண்டல கீழுடுக்கு சுழற்சி நிலவுகிறது. குமரி பகுதியில் மற்றும் ஒரு கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. டெல்டா மாவட்டங்களைப் பொறுத்தவரை வட தமிழக மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் மற்றும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
வட தமிழகம், தென் தமிழகம் மாவட்டங்களில் பரவலாகவும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். வடகிழக்கு பருவமழை இயல்பை விட 16 சதவீதம் குறைவாக உள்ளது.
அக்டோபர் 1 முதல் இன்று வரை 25 செ.மீ வரை வடகிழக்கு பருவமழை பதிவாகி உள்ளது. இன்று வரை சராசரியான 30.செ.மீ மழைக்கு பதிலாக 25 செ.மீ மட்டுமே பதிவாகி உள்ளது.
அடுத்த 5 தினங்களுக்கு தமிழகம்,புதுவை, காரைக்கால் பகுதிகளில் பரவலாக லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:
1. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
2. தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக,
20.11.2023: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
21.11.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
22.11.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, திருநெல்வேலி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்” இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.