தமிழ்நாட்டில் அதிக மழைப்பெய்யும் காலமான வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 15-18-க்குள் தொடங்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா கூறியதாவது, தென்மேற்கு பருவமழை அக்டோபர் 16 முதல் 18க்குள் விலகும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழைக்கு வழிவகை ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.
இயல்பை விட அதிகம்
தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகம் முழுவதும் இயல்பாக 33 செ.மீ. மழை பெய்ய வேண்டும்.இந்த ஆண்டும் அதனை ஒட்டிய அளவிலேயே மழை பெய்துள்ளதாக அவர் கூறினார்.
சென்னையைப் பொறுத்தவரை, இயல்பாக 45 செ.மீ. மழை கிடைக்க வேண்டிய நிலையில், இதுவரை 58 செ.மீ. மழை பதிவாகியுள்ளது — இது இயல்பை விட 29 சதவீதம் அதிகம் எனவும் அமுதா தெரிவித்தார்.
காற்றின் திசை மாற்றம் – பருவமழை துவக்கத்திற்கு அறிகுறி
வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் தற்போது மேற்கு திசை காற்று வீசுகிறது.அந்த காற்று விரைவில் கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் வீசத் துவங்கும் போது,தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16–18க்குள் துவங்கும் வாய்ப்பு உறுதியாகும் என அவர் கூறினார்.
வழக்கமாக அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை வடகிழக்கு பருவமழை நிலவுகிறது.கடந்த 15 ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்திலேயே பருவமழை துவங்கியுள்ளதாகவும்,அதிகமான ஆண்டுகளில் இயல்பை விட அதிக மழை பதிவாகியுள்ளதாகவும்,இரண்டு ஆண்டுகளில் தான் குறைவான மழை இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
வட மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு
இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை குறித்து வானிலை மையம் கணித்துள்ளபடி,வட மாவட்டங்களில் இயல்பாகவும் அல்லது இயல்பை விட அதிகமாகவும் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.தென் மாவட்டங்களில் இயல்பாக அல்லது சற்றே குறைவாக மழை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர், நவம்பர், டிசம்பர் என 92 நாட்கள் கொண்ட பருவமழை காலத்தில்
இயல்பாக 44 செ.மீ. மழை பதிவாகும்.ஆனால், இந்த ஆண்டில் இயல்பை விட அதிகமாக, அதிகபட்சம் 50 செ.மீ. வரை மழை பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 1 முதல் இதுவரை தமிழகத்தில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.இந்த மாதம் முழுவதும் 17 செ.மீ. மழை கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.